விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்தது தவறா என்றும் மோசமான வார்த்தைகளை ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார், தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பெற்ற பயிர்க்கடனை இரத்து செய்த அரசு அம்மாவின் அரசு. தமிழகத்திலுள்ள 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடனை தள்ளுபடி செய்திருக்கிறோம்.
இதையெல்லாம் பாராட்ட ஸ்டாலினுக்கு மனமில்லை. எடப்பாடி பழனிசாமி கட்சிக்காரர்கள் பயன்பெறுவதற்காக பயிர்க்கடனை ரத்து செய்திருக்கிறார் என்று ஸ்டாலின் கூறுகிறார். திமுக காரர்கள் வாங்கவில்லையா? கழகத்தினர் மற்றும் பொதுமக்களை விட திமுககாரர்களுக்கு தான் அதிகமான நிலம் இருக்கிறது. பயிர்க்கடன் ரத்து செய்ததில், திமுக கட்சிக்காரர்கள் தான் அதிகமாக பயன் பெற்றிருக்கிறார்கள்.
இப்படி சொன்னால் உங்கள் கட்சிக்காரர்களே உங்களுக்கு கருப்பு கொடி காட்ட ஆரம்பித்து விடுவார்கள். இவ்வளவு உதவி செய்ததை பொறுக்க முடியாத ஸ்டாலின், ஒரு எதிர்க்கட்சித் தலைவர் சிவகங்கையில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, விவசாயிகள் வாயில் விஷம் ஊற்றும் விஷக்கிருமி என்று என்னை குறிப்பிடுகிறார். எவ்வளவு கடுமையான, மோசமான வார்த்தையை பயன்படுத்துகிறார். விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்தது தப்பா?
இப்படிப்பட்ட தலைவர் ஆட்சிக்கு வந்தால் இந்த நாடு தாங்குமா? நான் ஒரு விவசாயி, அதனால் விவசாயிகள் மீது எனக்கு அக்கறையுண்டு. எனவே, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், என்ன தவறு இருக்கிறது? அவரால் பொறுக்க முடியவில்லை. கழகம் வளர்ந்து கொண்டிருக்கிறது, இந்த ஆட்சிக்கு நல்லபெயர் கிடைக்கிறது என்பதால், விவசாயிகள் வாயில் விஷத்தை ஊற்றும் விஷக்கிருமி முதல்வர் என்று சொல்கிறார். இந்த பட்டப்பெயர் தான் எதிர்க்கட்சித் தலைவருக்கு பிடிக்கும்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்என்று கிராமத்தில் பேசுவார்கள். கழகத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக முளைத்து மக்களுக்கு நன்மை செய்து நல்ல விளைச்சலை கொடுக்கிறது. திமுக என்ற தீயசக்தி இப்படித்தான் பேசுவார்கள். அவர்களிடமிருந்து நல்லவார்த்தையா வரப்போகிறது? என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.