அதிமுக பாஜக கூட்டணிக்கு இடையில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு வேறு வழியில்லாமல் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது. இருந்தாலும் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி கட்சியான பாஜகவை குறைத்து மதிப்பிட்டு பல நேரங்களில் உதாசீனப்படுத்தியே வந்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, பாஜக கேட்ட தொகுதியை எடப்பாடி கொடுக்கவில்லை, பாஜக கோரிக்கைகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஏற்று கொண்டாலும் கூட, எடப்பாடி நிராகரித்து விட்டு, திட்டமிட்டு பாஜக தோல்வி அடைய வேண்டும் என்பதற்காக திமுக வலுவாக இருக்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்தார். இதனால் கிடைத்த தொகுதிகளில் கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட்டது.
பாஜகவை ஒரு பொருட்டாவே மதிக்காமல் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி உதாசீனப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் நடந்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் போன்றவர்களின் மீதான ஊழல் வழக்குகள் தற்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு பக்க பலமாக இருக்கக்கூடிய எஸ்.பி.வேலுமணி மீது, அதிமுக ஆட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் சுமார் 500 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்தது தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ் பி வேலுமணி மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவிப்பு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டன. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர் நீதிபதி. அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்கும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி மீதான தார் ஊழலும் தற்பொழுது தூசி தட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதிமுகவினர் பல முறை மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக உதவியை நாடி சென்றுள்ள நிலையில், பாஜக கண்டுகொள்ளாமல் கழட்டி விட்டு உள்ளது. இதனால் எடப்பாடி மற்றும் அவருடைய சகாக்கள் சிறைக்கு செல்லும் காலம் நெருங்கி விட்டது, இதனால் இவர்கள் மேல் முறையீடு செய்ய உச்சநீதிமன்றம் செல்வார்கள், அப்போது இவர்கள் குடுமியை பாஜக பிடித்து வைத்து அரசியலில் தங்கள் நினைத்தை சாதிக்க திட்டமிடலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மற்ற மாநிலங்கள் போன்று திமுகவுக்கு மாற்றாக பாஜக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி அமைய வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக இருக்கிறார். அதற்கான ஆப்ரேஷன் ஏற்கனவே பாஜக தொடங்கிவிட்டதாக கூறப்படும் நிலையில் அமித்ஷா தீடிர் பயணமாக தமிழகம் வருவதும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வியூகத்துக்காக தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முக்கிய புள்ளிகள் மீதான வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதிமுகவில் இருக்கும் மற்ற முக்கிய புள்ளிகள் பெரும் பதற்றத்தில் இருக்கின்றனர். இதனால் இனி அதிமுகவில் இருந்தால் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து, பாஜக தலைமையிடம் தொடர்பில் இருந்து வரும் அவர்கள், தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக பக்கம் கூண்டோடு சாய்வதற்ககு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது குறிப்பிடதக்கது.