முதல்வர் பதவிக்கு 2500 கோடி பேரம் … கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு..!

0
Follow on Google News

கர்நாடகா : கர்நாடக முதல்வராக பதவியேற்க பேசப்பட்டதாக தன்னிடம் 2500 கோடி பேரம் பேசியதாக பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியிருப்பது கர்நாடக அரசியலில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிவருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய விஜயபுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பசங்கௌடா பாட்டீல் யத்னால் நேற்று முன்தினம் லிங்காயத் பஞ்சமாசாலி சமூக மாநாட்டில் உரையாற்றினார். அவர் பேசுகையில் ” புதுதில்லியை சேர்ந்த சிலர் 2500 கோடி ரூபாய் கொடுத்தால் என்னை முதல்வராக்குவதாக வாக்குறுதி அளித்தனர்.

அதற்காக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிஜேபி தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரை சந்தித்திருப்பதாக கூறினர். அவர்கள் அந்த வாய்ப்பை எனக்கு வழங்கியபோது நான் அவர்களிடம் நான் கேட்டேன். அந்த முதல்வர் வாய்ப்பை நான் எங்கே வைக்க வேண்டும் குடோனிலா அல்லது ஒரு அறையிலா என கேட்டேன்.

அரசியலில் உள்ள பலர் இதுபோன்ற போலியான வாக்குறுதிகளால் ஏமாறுகிறார்கள். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் லால் கிருஷ்ண அத்வானி, ராஜ்நாத் சிங் மற்றும் அருணஜெட்லீ ஆகியோரின் கீழ் நான் பணியாற்றியிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒருவரை முதல்வர் ஆவதற்கு 2500 கோடியை தயாராக வைத்திருக்க சொல்லமுடியுமா. இதுபோன்ற உறுதிமொழிகளை யாரும் இரையாக வேண்டாம்.

தேர்தல் நேரத்தில் பலவகையான நடவடிக்கைகள் வெளிப்படுகின்றன.சிலர் சட்டசபை தேர்தலில் போட்டியிடவேண்டும் என்பதற்காக வெகுஜன திருமணம் அல்லது 151 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கின்றனர். நோட்டு புத்தகம் விநியோகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்.

நான் யாருக்கும் பணப்பட்டுவாடா செய்வதில்லை. நான் முகத்தில் குத்தப்பட்டாலும் யாரையும் முதுகில் குத்தமாட்டேன் என்பதை நன்கு அறிந்த மக்கள் எனக்கு வாக்களிக்கின்றனர்” என கூறினார். மேலும் போலி மிஷனரிகள் குறித்தும் இஸ்லாமிய மக்கள் வாக்களிப்பது குறித்தும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பேரம் பேசிய விவகாரம் குறித்து காங்கிரஸ் தனது கண்டனத்தை பதிவுசெய்துள்ளது.