நீ ஒரு சங்கி..பாஜகவுக்கு ஓடி போ…! துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்க்கு எதிராக கடும் கொந்தளிப்பு…. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

சமீபத்தில் நடந்து முடிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் இல்ல திருமண நிகழ்வுக்கு பின் தமிழக அரசியல் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. மருத்துவர் ராமதாஸ் இல்ல திருமண நிகழ்வுக்கு திமுக தலைவர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். இந்த சம்பவத்துக்கு பின்பு, நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் மருத்துவர் ராமதாஸ்.

இதனை தொடர்ந்து அடுத்த வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாமக உடன் கூட்டணி அமைக்க திமுக முடிவு செய்துள்ளதாக தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சியை கழட்டி விடவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறபடுகிறது. காரணம் விசிக மற்றும் பாமக இரண்டு கட்சிகளும் ஒரு கூட்டணியில் இருப்பது என்பது சாத்தியமில்லை என்பது தான் அரசியல் கள நிலவரம்.

இந்நிலையில் சமீப காலமாக நாடக காதல் குறித்த சர்ச்சை பெரும் விவாதமாக நடந்து கொண்டிருக்கையில், மேலும் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்களின் சூழல் குறித்து திரைப்படம் கூட வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திமுக பொது செயலாளர் துரைமுருகன் மகனும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

அவர் தனது முகநூல் பக்கத்தில், ஆணாக பிறந்தாலும், பெண்ணாக பிறந்தாலும் நல்ல நேரம் வரும்போது திருமணத்தை பெற்றோரே செய்து வைப்பார்கள், அதுவரை பெற்றோருடன் சந்தோசமாக வாழுங்கள், அந்த மாதிரியான ஒரு வாழ்கை வாழ்நாளில் என்றுமே திரும்ப கிடைக்காது என தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவுக்கு பெரியாரிஸ்ட் மற்றும் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள பெரியாரிஸ்ட் மற்றும் திமுகவினர், சமூகநீதி, சமத்துவம், பாலின சமத்துவம் கொள்கை ரீதியாக பேசும் கழகத்தின் எம்.பியின் இந்த கருத்து அதிர்ச்சியை தருகிறது என்றும், மேலும் என்னதான் தீவிரமான திமுககாரனாயிருந்தாலும் ஒருசிலர் எங்களையும் வெட்கப்படவைத்துவிடுவார்கள். இன்று உங்களை பார்த்து ஒரு கட்சிக்காரனாய் எனக்கு வெட்கமாயிருக்கிறது என பதிலளித்து வருகின்றனர்.