கஜா புயல் போன்ற ஒரு தாக்கத்தை நிவர் புயல் ஏற்படுத்துமா.? மக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறை பற்றி அமைச்சர் விளக்கம்.!

0
Follow on Google News

கனமழை, புயல்,காற்றை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் புயலை சமாளிக்க தயார் நிலையில் அரசு உள்ளது என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு பேரிடர் மேலாண்மை மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

அதிகாலை 2.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுபெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது 740 கி.மீ தொலைவில் உள்ளது. கரை கடக்கும் போது 80 முதல் 100 கி.மீ. வரை காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிக கனமழை, அதி கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 6 தேசிய பேரிடர் மீட்பு படை அரக்கோணத்திலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு சென்று உள்ளனர். கனமழை, புயல் காற்றை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான அறிவுறுத்தலும் தொடர்ந்து மீன்வளத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு ஆதாரப்பூர்வமான தகவல்களை தொடர்ந்து வழங்க தயார் நிலையில் இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். கஜா புயல் போன்ற ஒரு தாக்கத்தை இந்த புயல் ஏற்படுத்தாது என தகவல் கிடைத்துள்ளது. இந்த புயல் கரை கடக்கும் நேரத்தில் 100 கி.மீ.க்குள் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. மக்கள் இதனை எதிர்கொள்ள தயாராகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் இருக்கும் மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநில கட்டுப்பாட்டு மையத்திலிருந்து செய்திகளை உடனுக்குடன் மீனவர்களுக்கு அனுப்பிட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ஏரிகள் மற்றும் நீர்நிலைகளையும் கள ஆய்வு மேற்கொண்டு கரை உடைப்புகள் இல்லாமல் கண்காணிக்க வேண்டும். பழமையான கட்டிடங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பபட வேண்டும். மின்கம்பிகள் துண்டிப்பு ஏதும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மக்களுக்கு அறுந்த மின்கம்பிகள் தொடர்பாக எச்சரிக்கை அளிக்கப்பட வேண்டும்.

மக்கள் அத்தியாவசிய பொருட்களான வலுவான கயிறுகள், காற்றை சமாளித்து எரியும் அரிக்கேன் விளக்குகள், பேட்டரியில் இயக்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், பேரீச்சை, திராட்சை போன்ற உலர்ந்த பழவகைகள், வறுத்த வேர்க்கடலை மற்றும் மூக்கடலை, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் கைப்பேசி டவர்களை சரியான நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஜெனரேட்டர்களில் போதுமான அளவு டீசல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளில் போதுமான அளவு இருப்பில் இருப்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.அரசு வாகனங்கள் நல்ல நிலையில் போதுமான அளவு எரிவாயு நிரப்பப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை, நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. குடிக்க உகந்த நல்ல நீரை போதுமான அளவிற்கு பாதுகாப்பாக சேமித்து வைத்து கொள்ள வேண்டும். அவசர கால மற்றும் அன்றாடம் தேவைப்படும் மருந்துகளை தயாராக வைத்திருக்க வேண்டும். புயல் வருவதற்கு முன்பு வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகளை பழுது பார்த்து வைத்திருக்க வேண்டும். வீட்டின் அருகிலுள்ள காய்ந்த மரங்கள், விளம்பர பலகைகளுக்கு அருகில் செல்லக்கூடாது அல்லது விளம்பரப் பலகைகள் அகற்றப்பட வேண்டும்.

புயல் கரையை கடப்பதற்கு முன் குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களை கேட்டு தெரிந்துக் கொண்டு அதன்படி செயல்பட வேண்டும். மாமல்லபுரம் முதல் காரைக்கால் வரை உள்ள மாவட்டங்களில் இடையே புயல் கரையை கடக்க உள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 6 பிரிவுகள் தேவையான கருவிகளுடன் கடலூரில் தங்கியிருக்க அனுப்பி வைக்கப்படுகின்றது. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.