“நான் தமிழன்” என்ற பெருமித உணர்வை முக ஸ்டாலின் ஏற்க மறுப்பது ஏன்.? வரலாற்றை எடுத்துரைத்த பேராசிரியர்.!

0
Follow on Google News

திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த 7ம் தேதி தமிழக முதல்வராக பதவி ஏற்று கொண்ட பின், அவருடைய டிவீட்டர் பக்கத்தில் சுய விபரம் குறிக்கும் இடத்தில், தமிழக முதல்வர், திமுக தலைவர் மற்றும் belong to the Dravidian stock, என மாற்றம் செய்துள்ளார், இதில் Belong to the Dravidian stock என்ற வாசகம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து ஒரு தரப்பினர் Belongs To Tamilian Stock என தங்களை அடையாளப்படுத்தி கொண்டு இந்திய அளவில் BelongsToTamilianStock என்ற ஹாஸ்டக் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

இந்நிலையில் முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள Belong to the Dravidian stock என்ற என்ற வாசகம் குறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் கூறுகையில், “I belong to Dravidian stock” என்று பதவியேற்கும் போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூறியிருந்தார். “ஆரிய-திராவிட இனவாதம்” என்கிற கட்டுக்கதையை, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வைத்துக்கொண்டு அரசியல் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் இவர்கள். ஆரிய-திராவிட இனவாதம் என்பதெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், குறிப்பாக கிறிஸ்தவ மிஷனரிகள் பரப்பிய பொய் கருத்து. எங்குமே ஒரு மொழி மாத்திரமே அடிப்படையாகக் கொண்டு ஒரு இனம் உருவாகிறது என்கிற கருத்து உலகத்தில் எங்குமே இல்லை.

இந்தியாவின் தேசிய கீதம் “ஜன கண மன” பாடும்போது “திராவிட உத்கல வங்கா” என்று பாடுகிறோம். அதில் திராவிட வருகிறது. திராவிட என்பது ஒரு நிலப்பரப்பாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நமது நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரை “திராவிட சிசு” என்று சொல்கிறோம். சென்னையில உவே சாமிநாத ஐயர் அவர்களுக்கு கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள சிலையில் கூட “திராவிட கலைமாமணி” என்று அவருக்கு பெயர் சொல்லப்பட்டிருக்கிறது. சாமிநாத ஐயர் அவர்களை திராவிடர் என்பதை திமுக ஏற்காது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அவரை திராவிட என்று சொல்கிறோம்.

“திராவிட” என்பது இந்த நிலப்பரப்பைக் குறிக்கும் சொல் தானே தவிர, ஒரு இனத்தை குறிக்கும் சொல் அல்ல. அதே போல ஆர்யா என்பது கூட ஒரு குணத்தை குறிக்கும் சொல் தானே தவிர, ஒரு இனத்தை குறிக்கும் சொல் அல்ல. நல்ல குணங்களைப் பெற்ற ஒருவனை “ஆரியன்” என்று அழைக்கும் பழக்கம் நம் பழமொழி இலக்கியங்களில் உண்டு. ஆர்யா என்றால் ஆங்கிலத்தில் “Gentleman” என்று சொல்கிறோமே, அதை போன்றது தான் ஆர்யா என்கிற வார்த்தை. இராமாயணத்தில் சீதை ராமனை “ஆர்யா” என்று அழைக்கிறாள். அதேபோல ராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும்போது ஜடாயு என்ற பறவை குறுக்கிடுகிறது; அந்த பறவையை “ஆர்யா” என்று அழைக்கிறாள் சீதை. ஜடாயு என்கிற பறவையை “ஆரிய இனம்” என்று எடுத்துக் கொள்ள முடியாது.

அதனால் “ஆர்யா” என்றால் குணத்தை குறிக்கும் வார்த்தை, “திராவிடம்” என்றால் புவியியல் பரப்பை குறிக்கும் வார்த்தை. அண்ணாதுரை அவர்களே கூட, திராவிடர் கழகத்தில் இருந்து வெளியே வந்து “திராவிட முன்னேற்ற கழகம்” என்று தான் ஆரம்பித்தார். திராவிடர் என்கிற இனவாதத்தை அவர் ஏற்கவில்லை; திராவிட என்கிற புவியியல் வாதத்தை தான் அவர் ஏற்றுக் கொண்டார். அந்த “ர்” என்ற எழுத்து விட்டு போனதுக்கு பின்னால் மிகப்பெரிய சித்தாந்தமே இருக்கிறது. அதை புரிந்து கொள்ள வேண்டும் இப்போதைய திமுக.

ஏராளமான தமிழ் அறிஞர்கள் இந்த திராவிட இனவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, அவர் முழுவதுமாக திராவிட இனவாதத்தை நிராகரித்தார். “ஆரியமாவது-திராவிடமாவது” என்று மிக சிறந்த நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். பாபா சாகே அம்பேத்கார் அவர்கள் “ஆரிய-திராவிட இனவாதத்தை” ஏற்றுக்கொள்ளவில்லை. “ஆரிய-திராவிட இனவாதத்தை வரலாற்றின் குப்பை தொட்டியில் எறிய வேண்டும்” என்று அண்ணல் அம்பேத்கார் குறிப்பிட்டுள்ளார். சுவாமி விவேகானந்தரும், திராவிடத்தை ஒரு இனமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இவைகள் இரண்டுமே இனங்கள் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் இல்லாத ஒன்றை, இனமாக சித்திரித்து, அதற்கு 100 ஆண்டுகால அரசியலை கொண்டு வந்து, அதில் நிறைய வர்ணங்களை பூசி வித்தை காட்டிக் கொண்டிருக்கும் திமுக, “நான் தமிழன்” என்ற பெருமிதமான உணர்வுடன் பொறுப்பேற்று இருந்தால், ஸ்டாலின் அவர்களை பாராட்டி இருக்கலாம். ஆனால் அவர் திராவிடர் என்கிற வார்த்தையை சொல்லி இருப்பது, என்ன காரணம் என்பதை உங்களது ஊகத்துக்கே விட்டு விடுகிறேன் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.