அதிமுக மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற சுகாதார துறை அதிகாரி வீட்டிலும் தீடீர் சோதனை நடைபெற்று வருகிறது.அதிமுக மாஜி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை இன்று காலை முதல் தீடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அமைச்சரின் உறவினர்கள் வீடுகள் என அமைச்சரின் அலுவலகங்களிலும் அதிரடியாக தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து சென்னை, வளசரவாக்கத்திலுள்ள பெத்தானியா நகர், 5 வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வு பெற்ற சுகாதார துறை அதிகாரி சீனிவாசன் என்பவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை தீடீர் சோதனையை மேற்கொண்டனர்.
அதிமுக மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதார அமைச்சராக இருந்தபோது, சீனிவாசன் என்பவர் சுகாதாரத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்தார். அவரின் வீட்டில் தீடீர் என்று 10க்கும் மேற்பட்ட போலீசாருடன், லஞ்ச ஒழிப்புத் அதிகாரிகள் இன்று காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அப்பகுதியில் சோதனை நடத்தி வந்தனர். மேலும் இந்த சோதனைகள் முழுமையாக முடிந்த பிறகே அவரின் வீட்டில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது, என்பது குறித்த தகவல்கள் தெரியவரும் என லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.