தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார் அறிக்கையில், மாற்றம் தருகிறோம் என்று ஆட்சிக்கு வந்த அறிவாலய திமுக ஆட்சி, மக்களுக்குத் தந்தது ஏமாற்றம் மட்டுமே. அதிலும் பொங்கல் பரிசாக கடந்த ஆட்சியில் அனைவருக்கும் 2,500 ரூபாய் கொடுக்கப்பட்டபோது, அதை 5,000 ரூபாய் ஆக உயர்த்திக் கொடுக்க வேண்டும் என கோபக் குரல் தந்த அப்போதைய எதிர்கட்சித்தலைவர், தற்போது முதல்வராக இருக்கும் போது கேட்காமலேயே தருவார் என்று மக்கள் எதிர்பார்த்த போது, பணம் எல்லாம் தரமாட்டோம் என்று அறிவித்தபோது, புதிய விடியல் என்பது இதுதானோ என்று மக்கள் உணர்ந்து கொண்டனர்.
பொங்கல் பண்டிகைக்கு இருபத்தியோரு பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, என்றார்கள். சரி பணம்தான் இல்லை மளிகைப் பொருட்களாவது ஒழுங்காகத் தரப்படுகிறதா என்றால் அது கூட இல்லை. ஜனவரி 4-ஆம் தேதி திட்டம் தொடங்கப்பட்டு விட்டாலும் இன்னும் அனைத்து பகுதிகளுக்கும் பொங்கல் பரிசுப் பொருட்கள் சென்று சேரவில்லை.
மக்கள் வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து பரிசு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். பெரும்பாலான ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பெறுவதற்காக பொதுமக்கள் 6 மணி நேரங்களுக்கு மேல் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பரிசுப் பொருட்கள் அரசின் பரிசு பையிலே வழங்கப்படுவதில்லை.
அதற்கு பதிலாக மக்களே தங்கள் பைகளை எடுத்து வருகிறார்கள் இன்னும் சில இடங்களில் பரிசு பையிலிருந்த பொருட்களை எல்லாம் மக்கள் எடுத்து வரும் பையிலே மாற்றிக் கொடுக்கிறார்கள் ரேஷன் கடை ஊழியர்களால் மக்கள் அலைக்கழிக்கப் படுவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி நாள் கடக்க சென்று வந்து கால் கடுக்க நின்று வந்து பெற்ற பொங்கல்பரிசு பையில் இருக்கும் இருபத்தோரு பொருட்களும் அளவும் தரமும் குறைவாக இருப்பதாக சந்தேகம் எழுப்புகிறார்கள். ரேஷன் கடைகளில் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.
கடந்தகால அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு விலையில்லா பொருட்கள் உடன் ரூபாய் 2,500 பொங்கல் பரிசுத் தொகையாக மக்களுக்கு வழங்கப்பட்டது. இப்போது பணம் மறுக்கப்பட்டது பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. இம்முறை மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படவில்லை என்பதை விட தரப்பட்ட பொருளும் தரமானதாக இல்லை என்பது கூடுதல் கோபத்தைக் கிளப்பியுள்ளது. நான் கேள்விப்பட்டவரை பல இடங்களில் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
பெரும்பாலான மக்கள் தங்கள் ஏமாற்றத்தை தெரிவித்துள்ளனர்.உயிரோடு வண்டுகள் உலாவரும் பாசிப்பருப்பும், காலாவதியான கோதுமை மாவும், கருப்படித்த அரிசி, வண்டுகள் சுவைத்த பொட்டுக் கடலையும், பாக்கெட் கிழிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மக்களை முகம் சுளிக்க வைத்தது. சொத்தையும் சொள்ளையுமாக, வண்டுகள் மேயும், காலாவதியான பொருட்கள் அவர்கள் ஆட்சியை நினைவூட்டுவது போலவே அமைந்திருக்கிறது.
ஆக மொத்தத்தில், பொங்கல் பரிசு என்பது விலையில்லா பொருளாக இல்லாமல், பயனில்லாப் பொருளாக மாறி விட்டது. என்ன செய்வது ஆட்சியும் மக்களுக்கு தரமான பொருளைத் தந்திருக்க வேண்டும். மக்களும் தரமானவர்களுக்கு ஆட்சியைத் தந்திருக்க வேண்டும். இனி வழங்கும் பகுதியிலாவது தரமான பொருட்களை மக்களுக்கு வழங்க பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.