நீட் தேர்வு குறித்து பாஜக துணை தலைவர் அண்ணாமலை IPS வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சியில், இந்திய மருத்துவக் கழகம் 2013ல் நாடெங்கும் நீட் தேர்வுகளை துவக்கியது, 2016ல் இந்தியா முழுவதும் நீட் தீர்வு மூலம் மருத்துவ கல்லூரி சேர்க்கை நடந்த பொழுது, பாரத பிரதமர் மோடி அவர்களின் தலையீட்டால், தமிழ்நாட்டுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைத்தது. கல்வியும் , அதை சார்ந்த நீட் தேர்வும் பொதுப்பட்டியலில் உள்ளது.
நீட் தேர்வை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலமும் ஒற்றுக்கொண்டு விட்டன. தமிழ்நாடு ஒரு விதிவிலக்கு அல்ல. நீட் தேர்வை ரத்து செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் யார் வழக்கு தொடுத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதன் பிறகே நீட் உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் மூலமாக நீட்டை எதிர்த்து வழக்கு தொடுக்க முடியாது. நீட் தேர்வின் மூலம் வருடாவருடம் மாணவர்களின் செயல்திறன் கூடி கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் 2019, 2020 வருடங்களில், மாநில அரசு பாடத்திட்டத்தை திருத்தம் செய்து நீட் தேர்வுக்கு இணையான பாடத்திட்டத்தை பள்ளிகளில் கொண்டு வந்துவிட்டார்கள்.
அதன் விளைவாகவே, தமிழ்நாட்டில் 2019ல், 48.57%ஆக இருந்த தேர்ச்சி சதவீதம், 2020ல் 57.44% ஆக உயர்ந்துள்ளது. தமிழ் மூலம் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை 2019’ல் 1,071ஆக இருந்தது, 2020’ல் 17,101 உயர்ந்துள்ளது. திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களின் அரசு தமிழ்நாட்டில் கொண்டு வந்த 7.5% உள் இட ஒதுக்கீட்டினால் 334 கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகி உள்ளது.
இதிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வை ஏற்று கொண்டுவிட்டார்கள் என்பது எளிதாக விளங்கும். நீட் தேர்வை நீதிமன்றம் மூலமாகவோ, மத்திய அரசை நிர்பந்தப்படுத்தியோ புறக்கணிக்க முடியாது. மேலும் திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்று கூறினார்கள். இப்பொழுது , ஆட்சிக்கு வந்தவுடன் , பாரத பிரதமரை சந்தித்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டு வருகிறார்கள்.
அது ஏற்கனவே 2016ல் கொடுத்தாகி விட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் அவர்கள் , நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு எடுத்து நடத்தினாலும், நீட் தேர்வை விரைவில் ரத்து செய்து விடுவோம் என்று கூறி வருகிறார். இது முன்னுக்கு பின்னாக பேசி, மாணவர்களை குழப்புவதற்கான
முயற்சி. இவர்கள் யாரும் மாணவர்களை படிக்க விட போவது போல தெரியவில்லை. ஆளும் மாநில அரசினால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதை தமிழ்நாட்டு மாணவர்களும், பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இது உச்ச நீதிமன்றம் உறுதி செய்த விஷயம். பொதுப்பட்டியலில் இருக்கும் நீட் தேர்வை இவர்களால் ஒரு தீர்மானம் போட்டு ரத்து செய்ய முடியாது. அதனால் கல்வித்துறை அமைச்சரோ, சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் அவர்களோ, முதலமைச்சர் அவர்களோ, மக்களையும் , மாணவர்களையும் குழப்புவதை விட்டுவிட்டு, இந்த வருடம், முழுமனதுடன், பள்ளிக்கூடங்களில் பயிற்சி வகுப்புகளை சிறப்பாக
நடத்தி, மாணவர்கள் நன்றாக படித்து , நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ கல்லூரிக்கு செல்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்க வேண்டும். திமுக, அரசியல் லாபத்திற்காக மக்களையும் மாணவர்களையும் குழப்புவதை அடியோடு நிறுத்த வேண்டும்.