பேச்சுவார்த்தை முடிந்த பிறகே கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.சென்னை ராயபுரத்தில் முதியோர் பென்சன், விதவைகள் பென்சன், புயல் காலத்தில் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான நிவாரண தொகையை சட்டமன்ற அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
திமுக ஆட்சியில் கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள்; ஆனால் கழக ஆட்சியில் கடன் வாங்கினாலும் கட்டுக்கோப்பான முறையில் நிதியைக் கையாண்டு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு தாலுகா வாரியாக முதியோர் பென்சன், மாற்றுத்திறனாளிகள் பென்சன் என அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது. மீன்வளத்துறை சார்பில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு சேதமடைந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணமாக ரூ.2 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
வாட் வரி அறிமுகப்படுத்திய நிலையில் அதனால் ஏற்படும் இழப்பை மத்திய அரசு தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் புரட்சித்தலைவி அம்மா அனுமதித்தார். ஆனால், அதில் ரூ.5 ஆயிரம் கோடி நிலுவையில் சென்று விட்டது. வாட் வரியில் ஏமாந்தது போல ஆகிவிட கூடாது என்பதற்காகவே ஜிஎஸ்டியில் 14 விழுக்காடு மாநில அரசுக்கு தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஏற்று கொண்டு, தற்போது ஜிஎஸ்டியில் 14 விழுக்காடு மாநில அரசுக்கு வந்து கொண்டிருக்கிறது. மாநில அரசின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நான் அமைச்சராக இல்லாத போது வாக்கி-டாக்கி டெண்டர் போடப்பட்டு உலக வங்கியின் ஒப்புதல் பெற்று நிதி பெறப்பட்டது. உலக வங்கியே ஒப்புதல் அளித்த நிலையில் எதிர்க்கட்சியினர் அரசியல் நோக்கத்திற்காக நீதிமன்றத்திற்கு சென்றனர். மேலும் விடப்படாத டெண்டரில், ஊழல் நடந்ததாக கூறி வருகின்றனர். தமிழ்நாடு ஊழல் என்பதே அறியாத மாநிலமாக இருந்தது. திமுகவினர் தான் ஒட்டு மொத்த ஊழலுக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.
மக்களுக்கு எந்த பொருளும் தட்டுப்பாடு இல்லாமல் நியாயமான விலையில் கிடைக்கவே அரசு செயல்பட்டு வருகிறது. 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெற்ற முதலமைச்சரின் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்நோக்கத்தோடு, விவசாயிகள் ஏற்று கொண்டதை பொறுத்து கொள்ள முடியாமல் குறை கூறி வருகிறார். இதில் திமுக விவசாயிகளும் பயன்பெற்று அவர்களும் கழகத்திற்கே வாக்களிக்க உள்ளனர்.
திமுக, அமமுக கூட்டணியில் உள்ளார்கள் என்பது தேனியில் நடைபெற்ற தேர்தல் முடிவில் தெரிய வந்துள்ளது. டி.டி.வி. தினகரன், திமுக பி டீம் ஆக செயல்பட்டு வருகிறார். கழக கூட்டணி கட்சிகளிடம் எந்த வித பாகுபாடும் இல்லாமல் வலுவான கூட்டணியாக அமைந்துள்ளது. தொகுதி பங்கீட்டில் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் அனைவருக்கும் சமமாக பங்கிடப்படும். பேச்சு வார்த்தை முடிந்த பிறகே கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கு முன்பு எந்தவித தகவலும் அறிவிக்கப்படாது. தேமுதிகவை கூடிய விரைவில் பேச்சுவார்த்தைக்கு அழைப்போம். இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.