தனியார் ஊடகம் ஒன்றுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அளித்த பேட்டியில், இந்த முறை உதயநிதி தேர்தலில் போட்டியிடுவாரா? என கேட்கப்பட்ட கேள்விக்கு இப்போதுதான் விருப்ப மனு கோரப்பட்டிருக்கிறது. விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு முறைப்படி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். என பதிலளித்தார், மேலும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த முக ஸ்டாலின். அண்ணா துரை மற்றும் கருணாநிதி அவர்களின் காலணிக்குள் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் எவ்வாறு தாங்கள் எப்படி உங்களைப் பொருத்திக் கொள்கிறீர்கள்? என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பேசுகையில்.
ஆங்கிலத்தில் கடைப்பிடிக்கும் வழக்கத்தின்படி, காலணிகளைக் குறிப்பிட்டு உங்களின் கேள்வி இருப்பதைத் தவறாகக் கருதவில்லை. எனினும், தமிழ் மரபு – திராவிட இயக்கத்தின் சுயமரியாதை உணர்வு இவற்றின் அடிப்படையில் இந்தக் கேள்வியை, ‘பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் ஆகியோரின் கொள்கைச் சட்டை, மக்களின் பார்வையில் எனக்கு எந்த அளவு பொருத்தமாக இருக்கிறது?’ என்பதாக எடுத்துக் கொள்கிறேன்.
13 வயதிலேயே கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை உருவாக்கி அதன் சார்பிலான விழாவுக்கு பேரறிஞர் அண்ணாவை அழைத்திருக்கிறேன். என்னிடம் மிகுந்த அன்பு காட்டியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கழகத்தின் தலைமைப் பொறுப்பையும் ஆட்சிப் பொறுப்பையும் சுமந்த தலைவர் கலைஞர் அவர்கள். அவரது வழிகாட்டுதலில், பல்வேறு சோதனைகளைக் கடந்து, அவரது மறைவிற்குப் பிறகு, கழகத்தினுடைய தலைமைப் பொறுப்பை ஏற்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன்.
தலைவர் கலைஞர் எனது கடுமையான உழைப்பைப் பாராட்டி இருக்கிறார். எனவே திராவிடக் கொள்கை எனும் சட்டையை பேரறிஞரிடமிருந்தும் கலைஞரிடமிருந்தும் பெற்று அணியவேண்டிய தேவையை காலம் உருவாக்கியிருக்கிறது. பேரறிஞர் அண்ணாவின் இதயமும் கலைஞரின் உழைப்பும் என்னை வழிநடத்துகின்றன. சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக என்னுடைய கடுமையான உழைப்பைத் தமிழக மக்கள் அறிவார்கள். அவர்களின் வரவேற்பும் வாழ்த்தும்தான் என்னை ஊக்கத்துடன் செயல்பட வைக்கிறது.
நீங்கள் வேல் ஒன்றை பிடித்திருந்தீர்கள். அது மதமா? அரசியலா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, வேலும் வாளும் பழந்தமிழர்களின் படைக்கலன்கள். ; ‘வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது, வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது’ என்று கவிஞர் கண்ணதாசன் எழுதினார். போரில் பயன்படுத்தும் படைக்கலன்கள் மற்றும் ஏர்கலப்பை ஆகியவற்றைத் தமிழர்கள் வழிபட்டனர் என்று அறியப்படுகிறது. பிரித்தாளும் சக்திகள் கடந்த காலத்தில் (ராமனின்) வில்லைப் பயன்படுத்தினர். அவர்கள் திடீரென்று அரசியலுக்காக வேலைப் பயன்படுத்துகின்றனர். தமிழக மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ‘நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரிகள்தான் முடிவு செய்கிறார்கள்’ என்ற புரட்சியாளர் மாவோவின் கூற்றுதான் நினைவுக்கு வருகிறது என தெரிவித்துள்ளார்.