தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேர்தலுக்கு முன்பு அவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி கடும் விமர்சனம் எழுந்து வருகிறது இது குறித்து பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது செயல்பாட்டின் அடிப்படையில் என்னை மதிப்பீடு செய்யுங்கள், ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சி உறுப்பினர் என்பவர் நல்ல மரபுகளை பின்பற்றி, துணிச்சலோடு, தகவல்கள் மற்றும் தரவுகளோடு, மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக தீவிரமாக குரலெழுப்பி போராடுவது அழகு.
அதே உறுப்பினர் ஆளுங்கட்சியாகும்போது, மேலும் அமைச்சராகும்போது, அமைதியும், அடக்கமும், அனுதாப குணமும் அழகு, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது தகவல்கள் பலவற்றை திரட்டி ஆராய்ச்சி செய்து எவ்வாறு எனது தொகுதி மக்களுக்கான உரிமைகள், நன்மைகளுக்கு போராடினேனோ, முழு மாநிலத்திற்கும் அமைச்சரான பிறகு அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் அரசு நிர்வாகத்தை திறம்பட செலுத்துவதுதான் என் இலக்கு, அதன் அடிப்படையில் கொள்கைகள், விதிமுறைகளை, செயல்பாடுகளை நான் அமைத்துக்கொண்டுள்ளேன்.
நான் கடந்த வாரம் சில ஊடக விவாதங்களில் கலந்துகொண்டேன். எனினும் ஊடகங்களிடமிருந்து வந்த
அழைப்பில் 1/3ஐ மட்டுமே ஏற்றுக்கொண்டேன் என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும். நிச்சயமாக எங்களின் முதல் கடமை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்தான். ஆனாலும் கூட கொரொனா தடுப்பு நடவடிக்கை முயற்சிகளுக்கு மத்தியில், நமது முதலமைச்சரின் வெளிப்படையான செயல்பாடு மற்றும் மக்களுடனான நேரடி தகவல் தொடர்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக நான் சில நேர்காணல்களில் பங்கேற்கிறேன்.
கடந்த சில நாட்களாக எனது பழைய காணொளிகள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதை அறிந்தேன். அவை கடந்த காலங்களில் பல கருத்தரங்கங்கள், செய்தியாளர்கள் சந்திப்புகள், மாநாடுகள், இணையவழி உரையாடல்கள், விவாதங்கள் மற்றும் நான் மக்களிடையே நேரடியாக உரையாடிய காணொளிகள் ஆகும். இப்போது நான் அமைச்சரான பிறகு அக்காணொளிகளை முதல் முறையாக பார்ப்பவர்கள் அதை வெட்டி, ஒட்டி, பலருக்கும் பகிர்ந்து வருகிறார்கள்.
பலரும் இக்காணொளிகளையெல்லாம் நான் அமைச்சரான பிறகு பேசிய காணொளிகளாக கருதி என்னை
மிகையாக பாராட்டியும், மற்றவர்களை விமர்சனம் செய்தும் கருத்திடுவதும், பகிர்வதும் எனக்கு வேதனையளிக்கிறது, உதாரணத்திற்கு, மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு வரும் காலங்களில் நான் உங்களோடு இணைந்து பணியாற்றிட தயாராக உள்ளேன் என கூறிவிட்டு என்னை வாழ்த்தினார்.
இதுபோன்று அரசியலில் பெருந்தன்மை மிகவும் பாராட்டத்தக்கது, கற்றுக்கொள்ளவேண்டியது. ஆகவே என்னை மிகையாக புகழ்வதையும், அடுத்தவர்களை எதிர்மறையாக விமர்சிப்பதையும் நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அது வாக்குவாதம் செய்வதற்கு உகந்ததாக இருக்கலாம், ஆனால் எதிர்கால நன்மைக்கு உகந்ததல்ல. நாம் அனைத்து தளங்களிலும் அமைதியாக இருக்க வேண்டும். தயவுசெய்து எனது செயல்பாடுகளின் விளைவுகளை காணும்வரை காத்திருந்து, அதன் அடிப்படையில் என்னை மதிப்பீடு செய்யுங்கள். நானும் என் தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வழியில் கட்சி வேறுபாடுகள் கடந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் கைகோர்த்து பணியாற்றிட தயாராக இருக்கிறேன் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.