தடுப்பூசி குறித்து ஆதாரமற்ற பொய்யான செய்திகளை ஊடகம் வெளியிடுவதா.? மத்திய அரசு விளக்கம்..

0
Follow on Google News

கோவேக்சின் தடுப்பூசிக்கான உரிமம் மற்றும் அதனை உற்பத்தி செய்வதற்கு தேவையான தொழில்நுட்ப உரிமை மாற்றத்திற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக ஒருசில ஊடகங்களில் செய்தி அறிக்கையாகவும், ஒருசில சுட்டுரைச் செய்திகள் வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி அறிக்கைகளும் சுட்டுரை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் முழுவதும் அடிப்படை ஆதாரமற்றது மட்டுமல்லாமல், உண்மையானவை அல்ல என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

தடுப்பூசிகளின் இருப்பை அதிகரிப்பதற்காக மத்திய அரசு தொடர்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொவிட்-19 தொற்றுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள், அமெரிக்காவின் தேசிய ஒழுங்குமுறை அமைப்புகள், ஐரோப்பிய மருத்துவ முகமை, இங்கிலாந்து, ஜப்பான் அல்லது உலக சுகாதார அமைப்பு (அவசரகால பயன்பாட்டிற்கான பட்டியல்) ஆகியவற்றால் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த அவசரகால அனுமதி வழங்கப்படும் என்று இந்திய அரசின் புதிய தாராளமயமாக்கல் உத்தியில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொவிட்-19 தடுப்பூசிகளின் இறக்குமதி எளிமையாக்கப்படுவதுடன், இந்தியாவில் அவற்றின் இருப்பு அதிகரிப்பதை உறுதி செய்ய முடியும். புதிய “தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய கொவிட்-19 தடுப்பூசி உத்தி”, தடுப்பூசியின் தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயத்தையும், தடுப்பூசியின் எண்ணிக்கை மற்றும் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய உற்பத்தியாளர்களை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் மூலம் விலை நிர்ணயம் கொள்முதல் மற்றும் தடுப்பூசிகள் நிர்வாகம் நெகிழ்வு தன்மை வாய்ந்ததாக இருப்பதுடன் நாட்டில் தடுப்பூசியின் உற்பத்தியும் இருப்பும் அதிகரிக்கப்படும். தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்களை செயல்படுத்துவது தொடர்பாக பாரத் பயோடெக் மற்றும் இதர பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இந்திய அரசு தற்போது ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டில் கோவேக்சின் தடுப்பூசியின் உற்பத்தியும் பயன்பாடும் மேம்படுத்தப்படும்.

புதிய கொள்கையின்படி, ஏற்றுமதி செய்யப்படும் மற்றும் உபயோகத்திற்கு தயாராக உள்ள வெளிநாட்டு தடுப்பூசிகளின் 100% டோஸ்கள் மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் மருத்துவமனைகள் ஆகியவை அடங்கிய இந்திய அரசு அல்லாத பிரிவுகளுக்கு வழங்கப்படும். வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட தனியார் உற்பத்தியாளர்கள் இந்தியாவிற்குள் நுழைவதையும் புதிய தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய கொவிட்-19 தடுப்பூசி உத்தி ஊக்குவிக்கிறது.

மாடர்னா, ஃபைசர் போன்ற வெளிநாட்டு தடுப்பூசிகள் எளிதாக இறக்குமதி செய்வதற்கு ஏதுவாக அவற்றின் உற்பத்தியாளர்களை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கோருமாறு இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேவேளையில், ஒருமித்த கருத்துடைய இதர நாடுகளுடன் கொவிட்-19 தடுப்பூசிகளுக்கு அறிவுசார் சொத்துரிமையிலிருந்து விலக்கு அளிக்க இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த இரண்டு இடர்பாடுகளின் வாயிலாக கொவிட்-19 தடுப்பூசியின் இருப்பு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் உறுதி செய்யப்படும்.