தி.மு.க.வில் தகுதி வாய்ந்த தலைவர் இல்லை. தடுமாறும் தலைவர் தான் இருக்கிறார்.! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.!

0
Follow on Google News

மனதில் ஈரம் இல்லாமல் ஸ்டாலின் பேசி வருகிறார். முதலமைச்சர் திட்டங்களுக்கு ஸ்டாலின் பாராட்டு விழா நடத்த வேண்டாம். கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும். என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார், மேலும் அவர் பேசுகையில், ஆட்சி அதிகார பசியோடு தற்சமயம் களத்தில் நின்று கொண்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்த பொழுது முதலமைச்சராகிவிட வேண்டும் என்று நினைத்தார்.

அதை கருணாநிதியும் விரும்பவில்லை, மக்களும் விரும்பவில்லை. 2021-ல் எப்படியாக முதலமைச்சராகி விடலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். மக்கள் விரும்பாததால் அவரால் எப்போதும் முதலமைச்சராக முடியாது. முதலமைச்சருக்கு மந்திரவாதி என்று பெயர் சூட்டியுள்ளார் ஸ்டாலின். முதலமைச்சருக்கு மந்திரமும், தந்திரமும் தெரியாது. ஆனால் மக்களின் தேவை அறிந்து உழைக்க தெரியும்.

ஒவ்வொரு பகுதியாக செல்கிறார் ஸ்டாலின். அவர் சொல்கிற இடத்தில் கட்சி உறுப்பினர்களை சந்தித்து வருகிறார். ஆனால் தமிழகத்தின் முதலமைச்சர் பொதுமக்களை சந்தித்து வருகிறார். 2021 தேர்தலுக்கு பிறகு திமுக அழிந்து விடும். இதில் எந்தவித மாற்றமும் கிடையாது. தி.மு.க.வில் தகுதி வாய்ந்த தலைவர் இல்லை. தடுமாறும் தலைவர் தான் இருக்கிறார். ஆனால் நமக்கு உள்ள தலைவர்கள் நிரந்தரமான எளிமையான தலைவர்கள் என்பதில் மாற்றமில்லை. கொங்கு நாடு, சோழநாடு கழகத்திற்கு வெற்றிக்கொடி நாட்டி வருவதைப்போல் பாண்டிய நாடும் வெற்றிக்கொடி நாட்டி முதலிடத்தை பிடிக்கும், இது சத்தியம்.

32 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட இயக்கமே மறுபடியும் ஆண்ட வரலாற்றை புரட்சித்தலைவி அம்மா உருவாக்கினார். அதேபோல் மீண்டும் ஒரு வரலாற்றை நாம் படைக்க இருக்கிறோம். புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தை தொடங்கியபோது திமுக என்ற தீய சக்தியை நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார். வரும் தேர்தலில் திமுகவை அப்புறப்படுத்தி புதிய வரலாறு படைப்போம்.

திமுக அழிவின் விளிம்பில் உள்ளது. எனவே வரும் தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சிப்பார்கள். ஆகவே நீங்கள் அனைவரும் திமுகவினரின் சதிகளை முறியடிக்க வேண்டும். அது மட்டுமல்லாது கழக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கழக அரசின் சாதனைகள் எடுத்துச் சொல்லி மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் கழத்திற்கு வெற்றியை தேடித்தர அயராது பாடுபடுவோம் என்று அம்மா கோயில் முன் அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.