பேரிடர் சூழலில் அரசியல் காரணங்களுக்காக நிர்வாக அனுபவம் வாய்ந்த அரசு அதிகாரிகளைப் பந்தாடும் போக்கினை தமிழக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார், மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா இரண்டாவது அலைப்பரவலில் இந்தியாவிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளாகும் முதன்மை மாநிலமாக உருவெடுத்து, கொரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 36,000 ஆகவும், பலியாவோரின் எண்ணிக்கை 500 ஆகவுமென இதுவரை கண்டிராத பேராபத்தினை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கும் வேளையில் நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்தி மக்கள் உயிரினைக் காக்கவேண்டிய அரசு, ஒவ்வொரு நாளும் உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து பந்தாடி வருவது அதிர்ச்சியும், கவலையும் அளிப்பதாக இருக்கிறது.
குறிப்பாக, சுகாதாரத்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் நிர்வாக அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை உடனுக்குடன் இடமாற்றம் செய்வதென்பது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதனை தமிழக அரசு உணரத்தவறியது ஏன் எனத் தெரியவில்லை. மக்களின் உயிர்களைக் பாதுகாப்பதைவிடவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகள் தான் அரசுக்கு முக்கியமாக்கப்படுகிறதோ என்று எண்ணும் அளவிற்கு இருக்கிறது இம்மாறுதல்கள்.
அரசின் முக்கிய நிர்வாகங்களில் தற்போது செயல்பட்டுக்கொண்டிருந்த அதிகாரிகளை வேறு துறைகளுக்கும், வேறு பணிகளுக்கும் மாற்றுவதால், அவர்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு முன்களப் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் தடைபடுவதுடன் அவை மக்களுக்குப் பயன்படாமல் வீணடிக்கப்படுகிறது. மேலும், தொற்றுப்பரவல் தீவிரமாகிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் நிர்வாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் செய்யப்படும் தேவையற்ற பணி மாறுதல்கள் கொரோனா தடுப்புப்பணிகளில் மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்திவிடும்.
புதிய அதிகாரிகள் புதிய பணியிடங்களுக்குச் சென்று பொறுப்பேற்கவும், கோப்புகளையும், களச்சூழலையும் ஆராய்ந்து, நிலைமை உணர்ந்து செயல்படத் தொடங்குவதற்கு ஏற்படும் சிலநாட்கள் காலதாமதம்கூடப் பெருகிவரும் பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தும் பணியில் பெரும் பின்னடைவை விளைவிக்கக் கூடும். தொடர்ந்து வரும் பேரிடர்காலச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதென்பது அரசு இயந்திரத்தின் இடைவிடாதத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை இயங்க விடுவதன் மூலமே சாத்தியமாகும். அரசின் தேவையற்ற பணிமாறுதல்கள் அதனைச் சீர்குலைக்கக் கூடியதாகவோ, தடைபடுத்த கூடியதாகவோ அமைந்துவிடக்கூடாது.
அண்மையில் ஆட்சியமைத்த மற்ற மாநிலங்கள் அனைத்திலும், கொரோனா தொற்றை முதல் அலையிலிருந்து தற்போதைய இரண்டாவது அலை வரை எதிர்கொண்டு, அதனைத் தடுக்கும் முன்னனுபவம் வாய்ந்த மாவட்ட ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் தொடர்ந்து இயங்க அனுமதித்திருப்பதாலேயே, கடந்தகாலப் படிப்பினைகளைக் கொண்டு நோய்ப்பரவல் காரணங்களை உடனடியாக ஆராய்ந்தறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க முடிந்தது.
மேலும், தகவல் பரிமாற்றத்தையும் துரிதப்படுத்த முடிந்ததுடன் அரசு இயந்திரத்தின் துணையுடன் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களின் ஒத்துழைப்போடு கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்தைப் பெருமளவு தடுத்ததுடன், உயிரிழப்புகளையும் குறைத்து கடந்த ஒரு மாதத்திற்குள் நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றன அம்மாநில அரசுகள். ஆனால், தமிழகத்தில் அதற்கு நேரெதிரான நிலையே நிலவுகிறது.
தளர்வுகளுடனான முதல் ஊரடங்கு, அதைத் தொடர்ந்த தளர்வுகளற்ற இரண்டாம் ஊரடங்கை செயல்படுத்திய விதம், குறிப்பாக எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்றி அனைத்து வகையான அங்காடிகளையும் திறந்துவிட்டது, சிறப்புப்பேருந்துகளை இயக்கி நகரத்திலிருந்து கிராமங்கள்வரை கொரோனா பரவலைக் கொண்டு சேர்த்தது என்று பல தவறான நிர்வாக முடிவுகளை எடுத்து தமிழக அரசு திணறி வருகிறது.
தமிழக முதல்வருக்கு வழிகாட்ட பல சிறப்பு ஆலோசனை குழுக்கள் இருந்தும் தவறான முடிவுகளை, தமிழக அரசு எடுத்துள்ளதைக் காணும்போது கொரோனாத் தொற்றைக் கையாண்ட அனுபவமிக்க அதிகாரிகளைப் பயன்படுத்த அரசு தவறிவிட்டதையே காட்டுகிறது. அடுக்கடுக்கான கொரோனா மரணங்களைக் காணும்போது, அரசின் அலட்சியப்போக்கும், தொலைநோக்கற்ற செயல்பாடுகளும் பெருந்தொற்றுத் தடுப்பு நிர்வாக ஆளுமையில் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கிவிட்டது எனலாம்.
ஆகவே, இனியாவது தற்போதையப் பெருந்தொற்று பேரிடர் சூழலைக் கருத்தில்கொண்டு , அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைக் கைவிட்டு பொறுப்புணர்வுடன் செயல்பட அரசு முன்வரவேண்டும் என அறிவுறுத்துகிறேன். ‘கட்சிக்கும், ஆட்சிக்கும் இடைவெளி இருக்க வேண்டும்’ என்று கூறிய அண்ணா, மொழிப்போர் களத்தில் மிகக் கடுமையாக நடந்துகொண்ட அதிகாரிகளைக்கூடப் பழிவாங்காமல் சுதந்திரமாக இயங்கவிட்டார். அவர்தம் வழிவந்த இன்றைய திமுக அரசு, பழிவாங்கும் நோக்கோடு அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது.
கொரோனா முதல் அலையைக் கட்டுக்குள் கொண்டுவந்த அனுபவமிக்க மாவட்ட ஆட்சியாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்தப் பதவிகளில் அர்ப்பணிப்புணர்வுடன் செயல்படுவோரை குறைந்த பட்சம் இந்த பெருந் தொற்றின் கொடுங்காலம் முடியும் வரையாவது பணியிட மாற்றம் செய்யாமல் அவர்களை ஊக்குவித்து, அவர்களது முன் அனுபவம் சார்ந்த பணி அலுவல்களைச் சரியாகப் பயன்படுத்தி நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்து மக்கள் உயிர்களைப் பாதுகாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.