ஊரடங்கு கடுமைப்படுத்துவதாக அறிக்கை மட்டுமே வெளியிடும் தமிழக அரசு, களத்தில் எந்த ஒரு மாற்றமும் நிகழவில்லை என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார், மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு ஒரு பயனுள்ள நடவடிக்கை என்பது உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சென்னையில் தொடங்கி தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் வாகனங்கள் வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை நாள்தோறும் நான் சுட்டிக்காட்டி வருகிறேன். தமிழக அரசும் ஊரடங்கு கடுமைப்படுத்தப்படுவதாக தினமும் அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால், களத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது தான் உண்மையாகும்.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதாக இருந்தாலும், மாவட்டத்திற்குள் செல்வதாக இருந்தாலும் வாகனங்கள் இ – பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசும் காவல்துறையும் அறிவித்துள்ளன. ஆனால், நேற்று எனது நண்பர் ஒருவர் கள்ளக்குறிச்சியில் புறப்பட்டு விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைக் கடந்து சென்னைக்கு சென்றிருக்கிறார். இடையில் எந்த இடத்திலும் அவரது வாகனம் தடுத்து நிறுத்தப்படவில்லையாம். சென்னையிலும் எந்த சாலையிலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வாகனங்கள் அணிவகுத்துக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த அளவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், இன்னும் எத்தனை வாரங்கள் ஆனாலும் கொரோனா கட்டுக்குள் வராது.
ஊரடங்கு என்பது அத்தியாவசியத் தேவைகளைத் தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியில் வர முடியாத நிலையை உருவாக்குவது தான். அத்தகைய ஊரடங்கை செயல்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது. ஊரடங்கை உறுதியாக செயல்படுத்த விடாமல் தமிழக அரசை தடுக்கும் சக்தி எது என தெரியவில்லை. ஊரடங்கு விஷயத்தில் காட்டப்படும் அலட்சியம் பேரழிவை ஏற்படுத்தும்.
கொரோனா பாதிப்புகள் குறித்தும், உயிரிழப்புகள் குறித்தும் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் பதைபதைக்க வைக்கின்றன. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காமல், ஊரடங்கு என்பதற்கு இலக்கணம் வகுக்கும் வகையில் மிகவும் உறுதியாக தமிழகத்தில் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; நான் மீண்டும், மீண்டும் கூறி வருவதைப் போல தேவைப்பட்டால் துணை இராணுவத்தை அழைக்க வேண்டும். அதன்மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.