இதே தேதி தான் 45 ஆண்டுகளுக்கு முன்னால் போலீசாரால் பூட்ஸ் காலால் மிதி வாங்கிய நாள்.! முக ஸ்டாலின் உருக்கம்.!

0
Follow on Google News

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இந்த நாள். இதே பிப்ரவரி 1ஆம் தேதி தான் 45 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1976 ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் சட்டத்தால் நான் கைது செய்யப்பட்ட நாள். ஒரு நாள் அல்ல ஒரு மாதம் அல்ல, ஓராண்டு காலம் நான் சென்னை மத்திய சிறையில் இருந்திருக்கிறேன். அப்போது எனக்கு வயது 23.

காவல் துறையினர் கோபாலபுரத்திற்கு வருகிறார்கள். தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்தார்கள்.
கலைஞர் எழுந்து நின்று, “நான் தயார் என்னைக் கைது செய்து அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லுகிறார்“. நாங்கள் உங்களைக் கைது செய்ய வரவில்லை. உங்களுடைய மகன் ஸ்டாலினைக் கைது செய்ய வந்திருக்கிறோம் என்று காவல்துறையினர் சொல்கிறார்கள். அப்போது தலைவர் கலைஞர் அவர்கள், “அவன் ஊரில் இல்லை. வந்தவுடன் அனுப்பி வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அடுத்தநாள் மதுராந்தகத்தில் ‘முரசே முழங்கு’ என்ற நாடகத்தை முடித்து விட்டு நான் சென்னைக்கு வருகிறேன். இந்தச் செய்தி கேள்விப்பட்டு வேகவேகமாக வருகிறேன். வந்தவுடன் தலைவர் கலைஞர் அவர்கள் உடனடியாக கமிஷனருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் மகன் வந்துவிட்டான். அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்ல காவல்துறையினர் வருகிறார்கள். என்னுடைய மனைவி துர்கா கலக்கத்தோடு இருக்கிறார். காரணம், திருமணமாகி 5 மாதம் தான் ஆகிறது. “கவலைப்படாதே இதுவரை கிடைக்காத சிறை அனுபவம் எனக்கு கிடைத்திருக்கிறது” என்று அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நான் சிறைக்கு சென்றேன்.

நாங்கள் சிறைக்குச் சென்ற தேதியிலிருந்து பல கொடுமைகளுக்கு நாங்கள் ஆளாக்கப்படுகிறோம். அங்கு இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களை கண்மூடித்தனமாக காவலர்கள் தாக்குகிறார்கள். நான் மயங்கிய நிலையில் கீழே விழுந்து படுத்திருக்கிறேன். பூட்ஸ் கால்களால் என் வயிற்றின் மீது ஏறி என்னை மிதிக்க முயற்சிக்கிறார்கள். அப்போது தியாக மறவன் – என்னுடைய ஆருயிர் அண்ணன் சிட்டிபாபு அவர்கள் துடிதுடித்து என்னை அடிக்க வருபவர்களை கை எடுத்து கும்பிட்டு, என் மீது படுத்து நான் வாங்கயிருந்த அத்தனை அடிகளையும் அவர் வாங்கிக் கொள்கிறார்.

அவருக்குப் பலத்த காயம் ஏற்படுகிறது. அவரை மோசமான நிலையில் மருத்துவனைக்கு நாங்கள் அனுப்பி வைக்கிறோம். அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அண்ணன் சிட்டிபாபு அவர்கள் இறந்துவிட்டார் என்ற செய்தி எங்களுக்குக் கிடைக்கிறது. அதைக் கேட்ட நாங்கள் கதறிப் புலம்புகிறோம். அவர் உடலைப் பார்க்க முடியவில்லை. அந்த வாய்ப்பை இழந்தோம். அதைத்தான் இப்போது 2021 பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி நினைத்துப் பார்க்கும் சூழ்நிலையில் உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன். இன்றைக்கும் பல போராட்டங்களில் பங்கேற்று கைது செய்யப்படும் போது, அடையாளம் காட்டச் சொல்லும் போது மிசாத் தழும்பு என்று கூறி எனது கையில் இருக்கும் தழும்பைக் காட்டுவேன்.