நான் சோதிடம் அல்ல, ஆனால் எனக்கு நம்பிக்கை உள்ளது..! பிரதமர் உரை..

0
Follow on Google News

75-வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டை கொத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார், அப்போது அவர் பேசியதாவது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சர்வதேச உறவுகளின் தன்மை மாறிவிட்டது. கொரோனாவுக்குப் பிறகு, புதிய உலக நியதிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த உலகம், இந்தியாவை புதிய கண்டோட்டத்தில் பார்க்கிறது. இந்த கண்ணோட்டத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன—ஒன்று, தீவிரவாதம் மற்றொன்று அதிகார விரிவாக்கம்.

இந்த இரு சவால்களையும் எதிர்த்து இந்தியா போரிட்டு வருவதோடு, கட்டுப்பாடான முறையில் வலிமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியா தனது கடமைகளை முறையாக நிறைவேற்றினால், நமது பாதுகாப்பு ஆயத்த நிலையும் வலுவானதாக இருக்கும். நமது இளைஞர்கள் ‘என்னால் முடியும்‘ என்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, தங்களது மனதில் நினைக்கும் எதையும் அடையும் ஆற்றல் பெற்றவர்கள். நமது தற்போதைய செயல்பாடுகள் தான் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

நமது இன்றைய தினம், இந்திய சுதந்திரத்தின் 100-வது ஆண்டுக்கான இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.நான் சோதிடம் கூறுபவர் அல்ல, செயல்பாட்டின் பலன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது நாட்டின் இளைஞர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, நம் நாட்டின் சகோதரிகள், புதல்விகள், விவசாயிகள் அல்லது வல்லுநர்களை நான் நம்புகிறேன். இதுபோன்ற ‘என்னால் முடியும்‘ என்று கூறும் தலைமுறையால், கற்பனை செய்து பார்க்க முடியாத அனைத்து இலக்குகளை அடைய முடியும்.

21-ம் நூற்றாண்டில், இந்தியாவின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. நமது வலிமை தான் நமது உயிர்சக்தி, நமது வலிமை தான் நமது ஒற்றுமை, நமது உயிர்சக்தி தான் தேசம் முதலில் – எப்போதும் முதலில் என்ற உணர்வை ஏற்படுத்தும். கனவுகளை பகிர்ந்துகொள்ளுதல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுதல், முயற்சிகளை பகிர்ந்து கொள்வதற்கு இதுவே சரியான நேரம்…. அத்துடன் வெற்றியை நோக்கிச் செல்வதற்கும் இதுவே சரியான நேரம்.

சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிக் கூறும் போதெல்லாம், தமது கண்கள் முன்பாக பாரதத் தாயின் அற்புதங்களைக் காண்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததுடன், இயன்றவரை கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறிவந்தார். புதிய ஊற்றிலிருந்து வெளிவரும் தண்ணீரையே எப்போதும் அருந்த வேண்டும், அதற்கு பிறகு, முன்னோக்கிப் பார்க்க வேண்டும். முன்னோக்கிச் சென்று, இந்தியாவை வளமானதாக, சிறந்ததாக மற்றும் இதுவரை இல்லாத வகையில் மாற்ற வேண்டும்.

இந்த 75-வது சுதந்திர தினத்தில், நாட்டின் அளவற்ற திறமை மீது நம்பிக்கை வைத்து முன்னோக்கிச் செல்வது நமது கடமை. புதிய தலைமுறைக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்; உலகத்தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்யவும் ஒருங்கிணைந்து பணிபுரிவது அவசியம்; அதிநவீன கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்; புதிய தலைமுறை தொழில்நுட்பங்களை உருவாக்கவும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.