முதலமைச்சர் பதவி, கடையில் கிடைக்கும் பொருளா, பொட்டலம் கட்டி வாங்குவதற்கு?முக ஸ்டாலினை விளாசிய எடப்பாடி பழனிசாமி.!

0
Follow on Google News

முதலமைச்சர் பதவி கடையில் கிடைக்கும் பொருளா? பொட்டலம் கட்டி வாங்குவதற்கு என்று ஸ்டாலின் மீது முதலமைச்சர் சாடியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது:- நான் , உங்களை போல் கிராமத்தில் பிறந்து வளர்ந்து, கட்சியில் கிளை கழக செயலாளராக தொடங்கி, படிப்படியாக உயர்ந்து எம்.எல்.ஏ ஆகி, எம்.பி. ஆகி, அமைச்சராகி, முதலமைச்சராகி யிருக்கிறேன்.

கட்சியிலும் அப்படித்தான் பதவி கிடைத்திருக்கிறது. ஆகவே, உழைத்தால் அந்த உழைப்பின் அருமை தெரியும். உழைக்காமலிருந்தால் அந்த அருமை தெரியாது, கஷ்டம் தெரியாது, பிரச்சினை தெரியாது, மக்களுக்கு நன்மை செய்யத் தெரியாது. மேடையில் மிட்டா மிராசுதாரா உட்கார்ந்திருக்கிறோம்? திமுக ஆட்சியில் எங்களைப் போல் இருப்பவர்கள் யாராவது இந்த பதவிக்கு வரமுடியுமா? விடுவார்களா? கருணாநிதி, மு.க.ஸ்டாலின், இப்போது உதயநிதி.

குடும்பம்தான் ஆட்சிக்கு வர முடியும், வேறு யாரையும் ஆட்சிக்கு வர விடமாட்டார்கள், அதிகாரத்திற்கும் வரமுடியாது. தமிழ்நாடு முழுவதும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். எல்லா மீட்டிங்கிலும் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் தான் கலந்து கொண்டிருக்கிறார்கள். வேறு யாராவது வந்தால் கட்சியை கைப்பற்றி விடுவார்கள் என்று பயம். கழகத்தில் அப்படியில்லை. நான், எம்.எல்.ஏ, அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர் வருவார்கள், மேடையிலிருக்கும் அனைவரும் உங்களை சந்தித்து உங்களுடைய எண்ணங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவார்கள்.

இது மக்களுடைய அரசாங்கம். நான் முதலமைச்சர் என்று நான் எப்போதும் எண்ணியதில்லை. இங்கே அமர்ந்திருக்கின்றீர்களே நீங்கள் தான் முதலமைச்சர், நீங்கள் போடுகின்ற உத்தரவை செயல்படுத்துகின்ற பதவி முதலமைச்சர் பதவி. ஸ்டாலின் அப்படியில்லை, மூன்று மாதத்தில் முதலமைச்சராகி விடுவாராம். எப்படி முடியும்? தேர்தல் அறிவித்து, மக்கள் ஓட்டு போடவேண்டும், எண்ண வேண்டும், பெரும்பான்மையான இடத்தில் வெற்றி பெறவேண்டும், அப்போதுதான் வரமுடியும். முதலமைச்சர் பதவி, கடையில் கிடைக்கும் பொருளா, பொட்டலம் கட்டி வாங்குவதற்கு? மக்களால் தேர்ந்தெடுக்கின்ற பதவி. அதை மறந்து அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் மக்களை சந்தித்து, என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தோம் என்று சொல்கிறோம், இன்னும் என்ன திட்டங்களை கொண்டு வருவோம் என்று சொல்கிறோம் மக்கள் அதை நம்புகிறார்கள், மக்கள் வாக்களிக்கிறார்கள். இது கழகத்தின் நிலை. திமுக ஒரு அராஜக கட்சி, அடாவடி கட்சி, ரவுடித்தனம் செய்கின்ற கட்சி, மக்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்