மரபணு மாற்றம் செய்யப்படாத அரிசியை மட்டுமே உலகத்துக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் இருந்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டை அடுத்து உணவு பொருட்கள் திரும்பப் பெறப்படுவதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.
இதற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் விடுத்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது. இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி வகை எதுவும் இல்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசியின் வர்த்தகத்துக்கு இந்தியாவில் தடை உள்ளது. அதனால் இந்தியாவில் இருந்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது என்ற கேள்விக்கே இடம் இல்லை.
ஐரோப்பிய யூனியனில் அரைக்கப்பட்ட அரிசி மாவில் இந்த மரபணு மாசு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இந்த அரிசி எங்கிருந்து வந்தது என்பதை அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பச்சரிசிக் குருனை, ஐரோப்பிய யூனியன் சென்றடைவதற்கு முன் பல பேரிடம் கைமாறியுள்ளது.
பல இடங்களில் கலப்படத்திற்கும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசி மரபணு மாற்றம் செய்யப்படாதது என்பதை ஏற்றுமதியாளர் உறுதி செய்துள்ளார். இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி வகை இல்லை. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசிகள் முறையாக பரிசோதனை செய்யப்படுகின்றன. அதனால் இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி ஏற்றுமதிக்கு வாய்ப்பில்லை.
மரபணு மாற்றம் செய்யப்படாத அரிசியைத்தான் உலக நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டதுபோல், இந்தியாவின் புகழைக் கெடுக்கச் சதி நடந்திருக்கலாம். இந்த விவகாரம் குறித்து இந்தியாவில் உள்ள மரபு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவினர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி இந்தியாவில் விளைவிக்கப்படவில்லை என்பது மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.