சமீபத்தில் திமுக அமைப்பு செயலாளர் மற்றும் திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ, எம்.பி ஆகி விட்டனர். ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை. கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது. அதை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும் என பேசிய ஆர்.எஸ்.பாரதி.
மேலும், நாங்கள் கொண்டு வந்து கட்சியில் சேர்த்தவர்கள் எல்லாரும் எம்பி, அமைச்சர் என ஆகிவிட்டனர். நாங்கள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறோம். கட்சியில் எவ்வளோ கஷ்டப்பட்டாலும் நம்மளை ஒதுக்கிவிடுவார்கள். அதையெல்லாம் சகித்துக்கொண்டு கட்சியில் ஒரு தொண்டனாக இருக்கவேண்டும். பதவி ஒருநாள் அதுவாகவே கிடைக்கும்” எனப் ஆர்.எஸ்.பாரதி பேசியது திமுகவில் யாருக்கு பொருந்துமோ இல்லையோ திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னாவுக்கு பொருந்தியுள்ளது.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது அதிகமான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று திமுகவுக்கு ஆதரவாகவும், திராவிட சித்தாந்தத்தை எடுத்துரைத்து கொள்கை பிடிப்புடன் அனல் பறக்க பேசி வந்தவர் பிரசன்னா. பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து திமுகவில் கொள்கை பிடிப்புடன் இருந்து வரக்கூடியவர் தமிழன் பிரசன்னா, கல்லூரியில் படிக்கும் போது மறைந்த முன்னால் திமுக தலைவர் கருணாநிதியிடம் பரிசுகளை பெற்றவர்.
சிறு வயதிலேயே அவர் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்த்துள்ளார். பிரசன்னா பல வருடம் திமுகவில் இருந்திருந்தாலும் அவர் பிரபலமானதற்கு முக்கிய காரணம் அவர் திமுகவுக்கு ஆதரவாக பேசியதை விட பாஜக மற்றும் இந்துத்துவா சித்தாந்தங்களுக்கு எதிராக மிக கடுமையாகவும் மேலும் அநாகரிகமாக பேசியதன் மூலம் அவருக்கு எதிராக வந்த எதிர்மறை விமர்சனம் மூலம் பிரபலமானார்.
ஆனால் அதுவே அவருக்கு எதிராகவும் அமைந்தது, ஒரு கட்டத்தில் திமுகவிற்கு பிரசன்னா பிரச்சாரம் செய்ய சென்றால், எங்கே.? இந்துக்கள் ஓட்டு திமுகவுக்கு விழாது என்பதற்காகவே பல வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது, திமுக பேச்சாளர் பிரசன்னாவை புறக்கணிக்க தொடங்கினார்கள். மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் அடுத்தடுத்து மிகப்பெரிய பதவிகளைப் பெற்று உயரத்துக்கு செல்லலாம் என்கிற எதிர்பார்ப்பில் இருந்த பிரசன்னாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இனி கட்சிக்கு பிரசன்னா பலனில்லை, அவர் இனி கட்சிக்கு பலவீனம் தான் என்பதை புரிந்து கொண்ட திமுக தலைமை, அவரை நீண்ட நாள்களாக புறக்கணித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் திமுகவில் பொறுப்புகள் அறிவிக்கப்பட்ட நிலையில். ஏற்கனவே திமுக மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளராக இருந்த பிரசன்னா அதே பதவியில் வகித்து வருகிறார். அவருக்கு எந்த ஒரு உயர்பதவியும் கிடைக்கவில்லை.
ஆனால் இதற்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த ராஜீவ் காந்திக்கு திமுக மாநில மாணவர் அணி தலைவர் பதவி கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் திராவிட சித்தாந்தத்துக்கு ஆதரவாக பிரசன்னாவும், தமிழ் தேசிய கருத்துக்களை முன்னெடுத்து ராஜீவ் காந்தியும் ஊடகங்கள் வாயிலாக மோதிக் கொண்டிருந்தனர்.
ஆனால் தற்பொழுது ராஜீவ் காந்தி திமுகவில் இணைந்து பிரசன்னாவை விட உயர் பதவிக்கு சென்றுள்ளது பிரசன்னாவுக்கு மிகப்பெரிய மனவேதனையை தந்துள்ளது. இந்நிலையில் எதிர்மறை விமர்சனம் மூலம் கிடைக்கும் வளர்ச்சி என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தாக முடிந்து விடும் என்பது பிரசன்னா ஒரு உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.