குடும்ப ஆதிக்க கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.மேலும் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- நிவர் புயலுக்காக அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைக்கு விரைந்து திரும்புவர்.கொரோனா தாக்கம் இருப்பதன் காரணமாகவும், இரண்டாம் கட்ட தாக்குதல் இருக்கும் என்ற எச்சரிக்கையின் அடிப்படையிலுமே அரசியல் கட்சிகளின் பரப்புரைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி அளவுகோலும், வேறுபாடுகளும் இல்லை.
திமுக போன்ற குடும்ப ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் கழகம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். தன் மகனை அரசியலுக்கு கொண்டு வந்து, திமுகவினரைப் போல பரம்பரை பரம்பரையாக நாங்கள் அரசியல் பதவிகளை பறிக்கவில்லை. கழகத்தில் கொடி பிடிக்கும் அடிப்படை தொண்டன் கூட முதலமைச்சராக முடியும்.
இந்த நிலை திமுகவில் சாத்தியமா? துரைமுருகனை முதலமைச்சர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கத் தயாரா? சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து கட்சி தலைமை ஆலோசித்து கூட்டணி கட்சிகளுக்கான முடிவை அறிவிக்கும். இதில் யூகங்களுக்கு இடமில்லை. இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.