கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்து வைப்பதற்கும் இந்திய ஜனாதிபதி அவர்கள் வருவதாகச் சொல்லப்படும் செய்திகள் எண்ணற்ற தேச அபிமானிகளின் உள்ளங்களில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாகவே உள்ளது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வேதனை தெரிவித்துள்ளார், மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
2021, மே மாதம் 2 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் தன்னை ’Dravidian stock’ என்று டிவிட்டரில் அடையாளப்படுத்திய நிமிடம் முதல் இன்று வரையிலும் இறையாண்மை மிக்க இந்திய அரசைப் பெயர் சொல்லி அடையாளப்படுத்தக் கூட அவர் தயாராக இல்லை. அவர் மட்டுமல்ல, அவரது அமைச்சர் சகாக்களும்; சட்டமன்ற உறுப்பினர்களும், அரசு அறிக்கைகளிலும் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியப் பாரத தேசத்தை இந்த நிமிடம் வரை ’ஒன்றிய அரசு’ என அழைத்து, இந்திய அரசை ஊராட்சிக்கும், மாவட்டத்திற்கும் இடைப்பட்ட ’பிளாக்’ என்றும், வட்டாரத்தை குறிக்கும் ’ஒன்றியம்’ என்ற வார்த்தையைக் கொண்டும் சிறுமைப்படுத்தி வருகிறார்கள்.
திராவிட ஸ்டாக்கிஸ்டுகளின் இந்த செயல்களால் இந்தியத் தேசத்தை தன்னுடைய தேகத்தைக் காட்டிலும், உயிராக மதிக்கும் கோடான கோடி இந்தியத் தேச அபிமானிகள் கடந்த 3 மாத காலமாக உள்ளூர மனம் வெந்து புழுங்குகிறார்கள். தமிழகத்தில் வாழக்கூடிய 8 கோடி தமிழக மக்கள் அனைவருக்கும் அவர்கள் பயன்படுத்தும் ’ஒன்றியம்’ என்ற வார்த்தையின் உள்ளார்ந்த அர்த்தம் தெரிய வருகின்ற போது அதற்கான எதிர் விளைவுகள் வேறு விதமாக இருக்கும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமரை Prime Minister Of India எனக் குறிப்பிட கூட மறுப்பவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதிகார ஆசை, பதவி பசிக்காக இந்த தேசம் துண்டாடப்படுவதையோ, இந்த தேசத்தின் மாண்பு குறைக்கப்படுவதையோ எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது.
இது நம்முடைய தாய்-தந்தையர்-மூதாதையர் பூமி. இந்த தேசத்தை அடையாளப்படுத்த மறுக்கக்கூடியவர்கள் இந்த தேசத்தில் வாழவே தகுதியற்றவர்களாக இருக்கும் போது, எப்படி ஆளத்தகுதியானவர்களாக இருக்க முடியும்? அரசியலில் பதவிகள் வரும்; போகும், ஆனால் இந்த தேசம் அப்படிப்பட்டதல்ல. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கோடான கோடி பேரை வாழ வைத்த மண் இது. இந்த தேசம் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. ஆனால் இந்த தேசத்தால் வாழ்வு பெற்றவர்கள் இந்த தேசத்தை தெற்கு என்றும், வடக்கு என்றும், கிழக்கு என்றும், மேற்கு என்றும் பிரித்து; இன, சாதி, மொழி ரீதியாகப் பிரிவினை படுத்துகிறார்கள்.
இவர்களுடைய ’ஒன்றிய’ கூப்பாடு இன்று வரையிலும் சிறிதும் கூட குறைந்தபாடில்லை. நமது தேசத்தை ’ஒன்றிய அரசு’ எனக் குறிப்பிடும் மாநில அரசை மத்திய அரசின் உள்துறையோ, மாநில ஆளுநரோ அழைத்து கண்டிக்கவும், அறிவுறுத்தவும் இல்லையே என இந்த தேசத்தின் மீது அப்பழுக்கற்ற பற்று கொண்ட தேச அபிமானிகள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழகச் சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்கும், முதல்வரின் தந்தை முத்துவேல் கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்து வைப்பதற்கும் இந்திய ஜனாதிபதி அவர்கள் வருவதாகச் சொல்லப்படும் செய்திகள் எண்ணற்ற தேச அபிமானிகளின் உள்ளங்களில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாகவே உள்ளது.
எனவே, ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி ஜனாதிபதி அவர்கள் உறுதியாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தால் அழைப்பிதழில் அவரது பெயர் எப்படிப் பொறிக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். திரு ராம்நாத் கோவிந்த அவர்கள், இந்திய பாரத தேசத்தின் ஜனாதிபதியும், மிகப்பெரிய ஜனத்திரளின் அடையாளமும் ஆவார். அதன் நன்மதிப்பை குறைக்கக்கூடிய செயல் ஒரு கோடியில் ஒரு மிகச்சிறிய பகுதியாயினும் அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அவரை அழைத்து அவர் ஒன்றிய அரசின் ஜனாதிபதி எனச் சிறுமைப்படுத்தும் முயற்சியில் இன்றைய திமுக அரசு ஈடுபடுமேயானால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.