தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், ஒரு சில இடங்களில் மே 18ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
லட்சத்தீவு, கேரளா, மாஹே, கடலோர கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இன்று (மே 15) இடி, மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென் கிழக்கு அரபிக்கடல் பகுதி மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு, மாலத்தீவு, அதனையொட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதி, கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் வாய்ப்புள்ளது.
அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறி, மே 18 ஆம் தேதி குஜராத் கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தமாக மாறி, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக தீவிரமடையும் வாய்ப்புள்ளது.
இது மேலும் தீவிரமடைந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் குஜராத் மற்றும் அதனையொட்டியுள்ள பாகிஸ்தான் கடற்கரையை நோக்கி செல்லும் வாய்ப்புள்ளது. இந்த புயல், மே 18ம் தேதி மாலை குஜராத் கடற்கரையை நெருங்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.