அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லஞ்ச ஒழிப்பு சோதனையில் அரசு அதிகாரிகள் அதிக அளவில் சிக்குவது குறித்து கமல் கருத்து தெரிவிக்கும் போது, அரசு எப்படியோ அந்த வழியாகதான் அதிகாரிகளும் என தெரிவித்துள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனி சாமி, இது தவறான கருத்து. அரசாங்கம் தானே சோதனை நடத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை யாருக்குக் கீழ் வருகிறது?
தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் செயல்பட வேண்டுமென்று தானே நினைக்கிறது. எங்கும் தவறு நடக்கக்கூடாது, தவறு நடந்தால் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென்ற அடிப்படையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர் புதிதாக கட்சியை தொடங்கியுள்ளார். ரிடையர்டு-ஆகி வந்துள்ளார். அவருக்கு என்ன தெரியும்? 70 வயதாகிறது. 70 வயதில் பிக்-பாஸ் நடத்திக் கொண்டிருக்கிறார். பிக்-பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்?
இதை பார்த்தால் ஊரிலுள்ள ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது. அப்படிப்பட்ட தலைவர்கள் சொல்லும் கருத்தை நீங்கள் சொல்வீர்களா? அவர் ஒரு கட்சித் தலைவர், அவர் கேட்கிறார் என்று நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்களே? நல்ல கேள்வி கேளுங்கள். அவரெல்லாம் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. நன்றாக இருக்கும் குடும்பத்தைக் கெடுப்பது தான் அவருடைய வேலை. அந்த டிவி தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டு விடும், நன்றாக உள்ள குடும்பமும் கெட்டு விடும்.
ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எத்தனையோ உள்ளன. நதிகள் இணைப்பைக் காட்டலாம். விவசாயிகள் மேற்கொள்ளும் பண்ணைத் திட்டம், புதிதாக என்னென்ன நடவு செய்கிறார்கள், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை எவை என மாணவச் செல்வங்களுக்கு நல்ல அறிவுரையை கொடுங்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சினிமா மூலம் நல்ல செய்திகளை சொல்லி, நல்ல பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஒரு படத்திலாவது நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய பாடல்களைப் பாடியுள்ளாரா? அந்தப் படத்தைப் பார்த்தால் அத்துடன் அந்தக் குடும்பம் காலியாகி விடும், அது போன்ற படங்களில் தான் நடிக்கின்றனர்.
எனவே, அவர் சொல்லும் கருத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியஅவசியம் இல்லை. எவ்வளவோ சிறந்த தலைவர்கள் இருந்தார்கள். பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நாட்டு மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர்கள். அவர்கள் இந்த நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர்கள். அப்படிப்பட்ட தலைவர்கள் போடுகின்ற திட்டங்கள் தான் இப்போதும் உயிரோட்டமுள்ள திட்டங்களாக இருந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது டிவீட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார் மேலும், சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
எதிர் காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’ என எம்ஜிஆர் பாடல் வரிகளையும் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.