எச்சரிக்கை.!ரஜினியின் முடிவு சரியே என துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தனது துக்ளக் பத்திரிகையில் ரஜினி அரசியலுக்கு வராமல் பின் வாங்கியது குறித்து வெளிவராத பல தகவல்களை வெளியிட்டுள்ளார், அவர் கூறியிருப்பதாவது, கட்சி துவங்கப் போவதில்லை என்று ரஜினி காந்த் (கடந்த டிஸம்பர் 29) அறிவிப்பதற்கு முன்தினம் இரவு, என்னிடம் அவருடைய முடிவைப் பற்றி விவரமாகப் பேசினார்.
அவருக்குப் பல ஆண்டுகளாக மேலும் கீழுமாக ஊசலாடும் ரத்த அழுத்தம் (BP) இருந்தது. அதனால் அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து, மாற்றாக ஒரு சிறுநீரகம் மட்டும் பொருத்தப்பட்டது. மன அழுத்தம் ஏற்பட்டு BP மிகவும் ஊசலாடினால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்பது அவரது நிலை. BP அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் அதற்கு நேரடி மருந்து உண்டு. ஊசலாடும் BP-யின் நிலைக்குத் தகுந்தபடி, அடிக்கடி மருந்து மாறும்.

இந்த நிலையில், கொரோனா ஆபத்தைத் தவிர இன்னொரு ஆபத்து, BP ஊசலாடுவதைத் தவிர்க்க அவர் எடுத்துக் கொள்ளும் மருந்து, கொரோனாவுக்கு அழைப்பு விடுவதைப் போல என்பது மட்டுமல்ல, கொரோனா கிருமியை அது வலுப்படுத்தவும் செய்யும். எனவே, ரஜினி பிரசாரத்துக்குப் போனால் கொரோனா ஆபத்தைத் தவிர்க்க முடியாது. மறுபக்கம், மன அழுத்தத்தால் BP மிகவும் ஊசலாடினால், அவருடைய ஒரே சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
கட்சி துவங்கினால் மனஅழுத்தத்தை தவிர்க்க முடியாது. அந்த ஆபத்தைத்தான் ஹைதராபாத் நிகழ்வு ரஜினிக்கு உணர்த்தியது. அதனால் ஒரு பக்கம் உயிருக்கு: மறுபக்கம் கட்சி ஆரம்பித்த பிறகு அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால், கட்சி ஆரம்பித்த நோக்கமே வீணாகி விடும். எனவேதான் முடிவை மாற்றிக் கொண்டார் ரஜினி.. அவர் கட்சி ஆரம்பிப்பதைப் பற்றி நாங்கள் இருவரும் பலமுறை பேசியதெல்லாம் அரசியல், சம்பந்தப்பட்டது மட்டுமே. உடல் நலத்தை பொறுத்தவரையில் அவரும், அவரது குடும்பமும் மட்டும்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நான் திட்டவட்டமாகக் கூறி வந்தேன்.
ரஜினி அரசிய லுக்கு வந்தால் தமிழகத்துக்கு நல்லது என்பது எவ்வளவு உண்மையோ, அதே போன்று அவர் உயிருக்கு அவ்வளவு ஆபத்து என்பதும் உண்மை. ஆனால் கட்சி ஆரம்பிக்க முடிவு செய்தபோது, அந்த ஆபத்தை எதிர்கொள்ளவும் முடிவு செய்தார் ரஜினி. ஆனால், துவங்கிய பிறகு அவரில்லை என்றால், கட்சி என்ன செய்யும்? அவரிடம் மட்டுமல்ல, யாரிடமும் அதற்கு விடை இல்லை. எனவே, ஹைதராபாத் நிகழ்வை எச்சரிக்கையாகக் கருதி ரஜினி எடுத்த முடிவு ஏற்கப்பட வேண்டியதே. துரதிர்ஷ்டம் ரஜினியுடையது அல்ல, தமிழகத்தினுடையது என துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
