தமிழ்நாடு நாள் தேதி மாற்றப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று பலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை18 ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என முதல்வர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை தெரிவித்துள்ளதாவது, 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டது இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை நிகழ்வு ! மதவாத பாகிஸ்தான் பிரிந்து, இந்தியா சுதந்திரம் பெற்று, மதச்சார்பின்மை ஏற்று, பிறகு குடியரசான பிறகும் முழுநாடாகப் பரிமளிக்க முடியாமல் தத்தளித்த வேளையில், மொழிவழித்தேசியமே நாட்டை ஒன்றிணக்கும் ஆற்றல் என உணர்ந்து அவ்வழியே பிரிக்கப்பட்ட பின்னரே சலசலப்பு ஓய்ந்து ‘இந்திய ஒன்றியம்’ வலுவாக உருவானது.
இன்றுவரை ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காண இந்த நிகழ்வே மகத்தான காரணமாயிருக்கிறது. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா கர்நாடகம் கேரளம் பிரிந்தபின்னர் எஞ்சிய பகுதி தமிழர்களுக்கானது. தமிழர்களுக்கென்று முதல்முறையாக ஒருங்கிணைந்த ஒரு நிலப்பரப்பு அதன் தாய்மொழி உரிமையோடு அமையப் பெற்றது. அதுவரை வடவர்களுக்கு, ஒரே குறிப்பிட்ட எதிர் அடையாளமாக பயன்பட்டு வந்த தென்னகமாம் ‘திராவிட’த்தின் தேவையும் முற்றுப் பெற்றது.
அன்றைக்கே திராவிடக் கழகங்களெல்லாம் தமிழ்க் கழகங்களாகப் பெயர் மாற்றம் பெற்றிருந்தால், இன்றைக்கு இந்த ‘திராவிடம் × தமிழம்’ குடுமிப்பிடி சண்டை நிகழ்ந்தேயிராது. தமிழர்நிலத்தில் இருந்த அனைவரும் தமிழ்த்தேசியராய்ப் பரிணமித்திருப்பார்கள். 1956 நவம்பர் 1 ஐ அடையாளமாக வைத்து, தங்கள் மொழிவழி நிலப்பரப்புகள் கிடைக்கப் பெற்ற நாளை, ‘தாயக நாளாக’, நம்மிடமிருந்து பிரிந்து போன ஆந்திர,கர்நாடக, கேரள அரசுகள் கொண்டாடும்போது பிரித்துக் கொடுத்த தாயகமான தமிழ்நாடு மட்டும், 11 ஆண்டுகள் தள்ளி 1967 சூலை 18 ஐ அடையாளமாக வைத்து ‘தாயகநாளா’கக் கொண்டாட வேண்டுமா ?? என்ன விதமான ஏரணம் இது ??
எவையெல்லாம் மூலத்திலிருந்து பிரிந்தனவோ அவை மூத்தவையாகவும், எது மூலமோ அது இளையதாகவும் காட்டப்படும் அவலம் பின்னாட்களில் அனைத்து வித ஏடாகூடங்களுக்கே வழி வகுக்கும் என்பது கூடவா புரியவில்லை ?? தமிழ்நாடு என்று பெயர்சூட்டக் காலம் கனிய வேண்டியிருந்தது, அறிஞர் அண்ணாதான் முன்னெடுத்தார், தியாகி சங்கரலிங்கனாரை மறந்து விடக்கூடாது – அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவையே ! அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அவற்றுக்கெல்லாம் தனித்தனிப் பெயர் சூட்டி விழா எடுத்தால் போயிற்று ! தமிழுக்காக எத்தனை விழா எடுத்தாலும் தகும்தான் !.எல்லைப்போர் ஈகியர்களுக்கான ஒரு இலட்சம் பொற்கிழி அறிவிப்புக்கும் பெரிய கைதட்டல். முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், நவம்பர் 1 தான் தமிழ்நாடு உருவான நாளாகக் கொண்டாடப்பட வேண்டும். நமக்கான கொடி, நமக்கான தேசியப்பாடல், நமக்கான சின்னங்கள் அனைத்தும் உருவாக்கப்பட வேண்டும்.
மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய நாளை உட்பகையோடு, முரண்பட்டு, இரண்டாகக் கிழிபட்டுக் கொண்டாட இடம் கொடுக்கக் கூடாது. முதல்வர் அவர்கள் உடனடியாக தம் முந்தைய அறிவிப்பை நீக்கி புதிய அறிவிப்பு வெளியிட்டு, இந்த மோதல் வலுக்காமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.நவம்பர் ஒன்று தமிழ்நாடு நாள் என கவிஞர் தாமரை வலியுறுத்தியுள்ளார்..