எந்த காலத்திலும் தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது. எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர அறிக்கை நாயகன் ஸ்டாலின் முயற்சி செய்யலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் வனவாசியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசியதாவது:-
வேண்டுமென்றே தினந்தோறும் அறிக்கை விட்டு அறிக்கை நாயகனாக வேண்டுமானால் ஸ்டாலின் திகழலாமேயொழிய, நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய எந்தக் காலத்திலும் உங்களுடைய கட்சியும் வராது, உங்களுடைய ஆட்சியையும் மக்கள் கண்டது கிடையாது. திமுக ஆட்சியில் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை செய்தார்கள்? ஆனால், நாங்கள் எவ்வளவு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம், நாட்டு மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன போன்றவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
வேண்டுமென்றே அரசின் மீது பழி சுமத்துவது, அமைச்சர்கள் மீது பொய்யான, அவதூறான செய்திகளை பத்திரிகையில் வெளியிடுவது, இதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மக்களுக்குச் சொல்லுங்கள். அதன் மூலமாக எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசைப் பொறுத்தவரைக்கும், நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப் பட்ட அரசு. பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்,புரட்சித் தலைவி அம்மா அவர்களும் உருவாக்கிய இயக்கம், நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் இந்த இயக்கம்.
அந்த வகையில், இருபெரும் தலைவர்கள் காட்டிய வழியில் இன்றைக்கு அம்மாவின் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏராளமான திட்டங்களை வழங்கி, தமிழகத்தில் மக்களுக்கு நல்லது செய்கின்ற ஒரே ஆட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி என்பதை நாங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம், நிரூபிப்போம் என்று சொல்லி இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கும், உயர்கல்வித் துறைக்கும் எனது நன்றியை தெரிவித்து, விடைபெறுகின்றேன். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.