பள்ளியில் பாலியல் சீண்டல்.! இளம் பயிர்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என ஆசிரியர் வீரமணி வலியுறுத்தல்.

0
Follow on Google News

சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது, இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள அந்த பள்ளியின்ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உள்பட 5 பரிவுகளில் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, இந்த கொடூர செயல் குறித்து கருத்து தெரிவித்துள்ள திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளதாவது, சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பாலியல் சீண்டல் குற்றங்களைச் செய்து வந்த ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர், அருவருக்கத்தக்க ஆபாச மொழிகளை, தனது மாணவிகளுக்குக் குறுஞ்செய்திகளாக அனுப்பியதும், ஆன்லைன் வகுப்புகளிலும் வெளிப்படுத்தியதும் பற்றி மாணவிகளும், பெற்றோரும் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல்வாழ்வு பாதுகாப்புக் குழுவினரும், காவல்துறையினரும், பள்ளிக்கல்வித் துறையும் கடும் நடவடிக்கையை தயவு தாட்சண்யமின்றி எடுப்பது மிக மிக முக்கியம்.

அதேபோல் சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் விஷமங்கள் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபற்றியும் காவல்துறை விசாரித்து உரிய நடவடிக்கைகளைக் காலதாமதமின்றி மேற்கொண்டு, கல்வித்துறையில் ஒழுக்கக் கேடுகள் என்னும் களைகளைக் களைந்து இளம் பயிர்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.