புதிய முக்கோண வடிவ நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டுகிறார்.? சிறப்பு அம்சம் என்ன.?

0
Follow on Google News

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை புதுதில்லியில் உள்ள சன்சாத் மார்க்கில் வரும் டிசம்பர் 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டுகிறார். தற்சார்பு இந்தியா லட்சியத்தின் முக்கிய பகுதியான இந்த புதிய கட்டிடம், சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக மக்களின் நாடாளுமன்றத்தை கட்டுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பாகவும், நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2022-ஆம் ஆண்டில் புதிய இந்தியாவின் தேவைகள் மற்றும் நோக்கங்களை பூர்த்தி செய்யும் வகையிலும் இருக்கும்.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மின்சார சிக்கனம் மிக்க, அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளை கொண்ட முக்கோண வடிவ கட்டிடமாக, தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அருகில் இந்த புதிய கட்டிடம் வர வுள்ளது. தற்போதைய மக்களவையின் அளவை விட மூன்று மடங்கு பெரிதாகவும், தற்போதைய மாநிலங்களவையை விட குறிப்பிடத்தக்க அளவு விசாலமாகவும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைய உள்ள அவைகள் இருக்கும்.

கட்டிடத்தின் உட்புறப் பகுதிகள் இந்திய கலாச்சாரத்தையும், நமது பிராந்திய கலைகள், கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் கட்டிடக் கலையையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். பொதுமக்கள் வந்து பார்க்கக்கூடிய வகையில் அமையவுள்ள பிரமாண்டமான மத்திய அரசியலமைப்பு கண்காட்சி கூடமும் கட்டிட வடிவமைப்பு வரைபடத்தில் உள்ளது. பசுமை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார புத்தாக்கத்திற்கு வழிவகுத்து புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது.

உயர்தர ஒளி-ஒலி அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட மற்றும் வசதியான இருக்கை அமைப்புகள், சிறப்பான அவசரகால வெளியேறும் வசதிகள் ஆகியவற்றை இக்கட்டிடம் கொண்டிருக்கும். நில அதிர்வு பகுதி-5 தேவைகள் உட்பட உயர்ரக கட்டமைப்பு பாதுகாப்பு தரநிலைகளை இந்த கட்டிடம் உறுதிப்படுத்தும். பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் எளிதாக இருக்கும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களவை தலைவர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி மற்றும் மாநிலங்களவையின் துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த நிகழ்வு இணையத்தில் நேரலை செய்யப்படும்.