இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது, அண்மையில் பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் தாராபுரத்திற்கு வந்து பேசியிருக்கிறார். அங்கு தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார்.பிரதமர் மோடி அவர்களே… தி.மு.க. ஆட்சி இருந்தபோது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறீர்களே… தயவுசெய்து பொள்ளாச்சிக்கு வந்து கேளுங்கள். இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று பொள்ளாட்சியில் வந்து கேளுங்கள்.
நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி மோடி எதிர்ப்பு அலை வீசியது என்பது உங்களுக்கு தெரியும். ஒரு இடம் கூட மோடி தலைமையில் இருக்கும் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை. இப்போது இந்த சட்டமன்றத் தேர்தலில் மோடி எதிர்ப்பு அலை மட்டுமல்ல எடப்பாடி மீதான எதிர்ப்பலையும் சேர்ந்து வாஷ் அவுட் ஆகப்போகிறார்கள். இது நடக்கிறதா? இல்லையா? என்று பாருங்கள். இந்த அலை அவர்களை அடியோடு அகற்றப்போகிறது. அது தான் உண்மை.
அதே நேரத்தில் நான் உங்களை கேட்டுக் கொள்ள விரும்புவது, பாஜக வரப்போவதில்லை. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்களுக்கு தமிழ்நாடு இடம் கொடுக்கப்போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் அ.தி.மு.க.வும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றுவிடக் கூடாது. அதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி அவர்கள் தாராபுரம் வந்து பேசினார். அதற்கு நான் அப்போதே பதில் சொன்னேன்.
அவர் நாளையும் மதுரைக்கு வருவதாக எனக்கு செய்தி வந்திருக்கிறது. எனவே நான் அவரிடத்தில் ஒரு அன்போடு, உரிமையோடு ஒரு கோரிக்கையை வைக்கிறேன். மோடி அவர்களே… 2015-ஆம் ஆண்டு நீங்கள் பட்ஜெட் அறிவித்தபோது மதுரையில் எய்ம்ஸ் உருவாக்கப்படும் என்று அறிவித்தீர்கள். 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வந்து அடிக்கல் நாட்டிவிட்டு சென்றீர்கள்.
நீங்கள் இன்றைக்கு இரவே மதுரைக்கு வரப் போகிறீர்கள். நாளை காலையில் மதுரையில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசப்போகிறீர்கள். இன்றைக்கு இரவோ அல்லது நாளை காலையிலோ, யாருக்கும் தெரியாமல் நீங்கள் அந்த எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தின் நிலை என்ன ஆனது என்று போய்ப் பாருங்கள். நீங்கள் சொன்னது கட்டப்பட்டதா? செங்கல் வைத்துவிட்டு சென்றேனே… அது எங்கே? என்று கேளுங்கள் என முக ஸ்டாலின் பேசினார்.