தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அலுவகங்கள் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்ந்து அரங்கேறி வரும் ஒரு நிகழ்வு. கடந்த 1993ம் ஆண்டு சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இருந்தவர்களின் உடல்கள் சிதறி எதிர் வீட்டு மாடியில் டியூசன் படித்துக் கொண்டிருந்த குழந்தைகள் மீது விழுந்த அளவிற்கு பயங்கரமான வெடிகுண்டு விபத்து இது.
இதனை தொடர்ந்து 2007 திமுக ஆட்சியில் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலலாயத்தின் மீது சரமாரியாக கற்களை எரிந்து தாக்குதல் நடத்தினர். மேலும் அலுவலகம் உள்ளே இருந்த கொடிக் கம்பத்தைப் பிடுங்கி அதைக் கொண்டு ஜன்னல் கண்ணாடிகளை திமுகவினர் அடித்து நொறுக்கினர். தாக்குதல் சம்பவம் நடந்தபோது, அலுவலகத்திற்குள் பாஜக பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பல பெண்களுக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்பு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயம் நேற்றிரவு அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியுள்ளனர்.பாஜக அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் எந்த சேதமும் ஏற்படவில்லை. நள்ளிரவில் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதும், அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது குறித்து, பா.ஜ.க. அலுவலகத்திலும், அதை சுற்றியுள்ள சாலைகளிலும் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்துள்ள காவல்துறையினர், அவற்றை ஆய்வு செய்து வருவது குறிப்பிடதக்கது.