முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மனு..! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

தமிழகத்தில் இனிமேல் எந்த நிலையிலும் திமுக அரசால் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று மொழிபெயர்க்க அனுமதிக்கக் கூடாது எனவும், நீட் தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கூடாது எனவும், தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்தும் தமிழக ஆளுநரிடம் புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது என்பதும் இந்தியாவிலிருந்து தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்ற பிரிவினைவாத எண்ணமும் வெவ்வேறு. இந்தச் செயலில், தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள் இந்திய நாட்டின் நன்மதிப்பைக் கெடுக்கும் வகையிலும், தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் சமீபகாலமாகச் செயல்பட்டுவருகின்றனர் என்பதை ஒரு தேசபக்தர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் எத்தனையோ மதங்கள், மொழிகள், இனங்கள் இருந்தாலும் ‘ஒரே தேசம்’ என்ற அடிப்படையில் தான் 140 கோடி மக்களும் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இந்திய தேசம் அரசியல், பொருளாதாரம் மற்றும் நிர்வாக நோக்கங்களுக்காக பல்வேறு மாநிலங்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்தியா, அதாவது பாரதம் என்பது மாநிலங்களின் கூட்டரசாக இருக்க வேண்டும் என்பதை தான் இந்திய அரசியலமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

‘மாநில அரசின் எல்லைகளை மத்திய அரசால் மாற்றியமைக்க முடியும். ஆனால், இந்திய அரசின் எல்லைகளை எவராலும் மாற்றியமைக்க முடியாது. என்பதைத்தான் ”India is an indestructible union of destructible states” என அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழு தலைவரான டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அரசியல் சாசனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். இதன் பொருள் இந்தியா ஒரு கூட்டாட்சியாக இருந்தாலும், அது மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இல்லை மற்றும் இந்திய தேசத்திலிருந்து பிரிந்து செல்ல எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை. எனவே, பாரத – இந்திய தேசம் ஒரு இறையாண்மை மிக்க, சமத்துவமிக்க, மதச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு நாடு ஆகும்.

சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய மக்கள் அனைவரும் நமது மத்திய அரசை ‘இந்திய அரசு-மைய அரசு’ என்றே அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும், நமது இந்திய அரசை தமிழில் “இந்திய – மத்திய அரசு” அல்லது “இந்திய மைய அரசு- இந்திய அரசு-நடுவன் அரசு” என்றுதான் அழைத்தார்கள். பல்வேறு அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் கடந்த கால ஆட்சியிலிருந்த திரு.மு.கருணாநிதி மற்றும் செல்வி. ஜெ. ஜெயலலிதா ஆகியோரும் மத்திய அரசங்கத்தை ‘இந்திய அரசு – மைய அரசு – மத்திய அரசு’ என்றுதான் அழைத்திருக்கிறார்கள். ஆனால், 7 மே 2021 அன்று, முதல்வராகப் பதவியேற்ற திரு.M.K.ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சர்கள் இந்திய அரசை வேண்டுமென்றே இழிவு படுத்த வேண்டுமென்ற நோக்கில் ‘ஒன்றிய அரசு’ என்று அழைக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ’ஒன்றியம்’ என்ற வார்த்தையானது ஊராட்சி அளவிலான பஞ்சாயத்தை மட்டுமே அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது. ‘Union of States’ என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதை வேண்டுமென்றே திரித்து, இந்திய மத்திய அரசை Block அளவிலான பஞ்சாயத்து அமைப்புடன் இணைத்து, மத்திய அரசை இழிவுபடுத்தும் வகையில், சமீபகாலமாக, “ஒன்றிய அரசு” என்ற வார்த்தையை திமுகவும், அதன் கூட்டணி கட்சியினரும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதாவது இந்திய தேசம் அல்லது பாரத தேசம் என்பதை பயன்படுத்த அவர்கள் தயாராக இல்லை.

‘இந்திய அரசின் ஒருமைப்பாட்டிற்கு, இறையாண்மைக்கும் கட்டுப்படுவோம்’ என்ற உறுதி மொழியுடன் தற்போதைய முதல்வர் மற்றும் அமைச்சர்களும், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் நமது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவே உள்ளன. ஜூன் 21, 2021 அன்று, அப்போதைய மாண்புமிகு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் ஆங்கிலத்தில் உரை ஆற்றினார்.

ஆளுநர் ஆங்கில உரையின் தமிழ் மொழி பெயர்ப்பில் 6,7,9,13,14,15,25,32,34, 38,40,56,58 ஆகிய பத்திகளில் “ஒன்றிய அரசு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். ’இந்தியா’ என்ற பெயரைக் குறிப்பிட வேண்டிய இடங்களில் கூட பயன்படுத்தவில்லை, அது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது. ஆளுநரின் உரையின் தமிழாக்கத்திலும் “ஒன்றிய அரசு” என்ற வார்த்தையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். சட்டசபையில் கவர்னர் உரை அவர்களின் நோக்கத்தை கவனத்தில் கொண்டு புறக்கணித்து இருக்க வேண்டும். பாரத தேசம் அல்லது இந்திய அரசு என்பதற்கு பதிலாக ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதித்தது எப்படி என்று தெரியவில்லை?

இந்தப் பிரச்சினை குறித்து 17 ஜூன் 2021 அன்று அப்போதைய மாண்புமிகு ஆளுநருக்கு ஒரு மனுவும் எழுதியுள்ளேன். ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்னும் அவர்கள் இந்திய அரசை தொடர்ந்து இழிவுபடுத்தும் வகையில் ’ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையையே பயன்படுத்துகின்றனர். இது தொடர்ந்தால், பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் “ஒன்றியம்” என்ற வார்த்தை இடம் பெற்று விடும் ஆபத்து உள்ளது.

கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வேண்டுமென்றே ’ஒன்றியம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார்கள். இம்முறை அது நடக்கக் கூடாது. மத்திய அரசு மற்றும் பஞ்சாயத்து யூனியன் இரண்டையும் சமப்படுத்த முடியாது. இரண்டும் வெவ்வேறு அர்த்தங்களை கொண்டுள்ளன. இந்திய இறையாண்மையின் மீதான அவர்களின் வெறுப்பை, தமிழ் மக்கள் மத்தியில் விதைப்பதற்காகவே ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை திரு.ஸ்டாலினும், அவரது சகாக்களும் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர் என்ற முறையில், மாண்புமிகு ஆளுநராகிய தாங்கள் இதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

2021 மே 7ஆம் தேதி முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட திரு.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்க முகப்பில் “Chief minister of Tamilnadu, President of DMK, Belongs to Dravidian Stock” என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்டாலினும் அவரது கட்சியினரும் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியை இந்தியத் தேசத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தவும், பிரிவினைவாதத்தை தமிழ் மக்கள் மத்தியில் விதைத்தும், தங்களது நீண்ட கால திராவிட பிரிவினைவாத பணியை நிறைவேற்றவும் பயன்படுத்த வருகிறார்கள் என்பதை இது தெளிவாக பிரதிபலிக்கிறது. ஸ்டாலினையும், அவரது அமைச்சர்கள் பயன்படுத்தும் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இங்கு தமிழகத்தில் சில அரசியல் கட்சியினர் மட்டுமே தவறான பிரச்சாரத்தாலும், சரியான புரிதல் இல்லாமையாலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துகின்றனர். ஆனால், பொது மக்களும், பெற்றோர்களும், மாணவர்களும் நீட் தேர்வை வரவேற்கின்றனர்.

இது தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு மாண்புமிகு ஆளுநராகிய தாங்கள் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களின் பேரரசாக இருக்க வேண்டும் இனிமேல் எந்த நிலையிலும் திமுக அரசால் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று மொழிபெயர்க்க அனுமதிக்கக் கூடாது. எனவே, இவை குறித்து தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.