2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின் தி.மு.க. என்ற கட்சியே இருக்காது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரைத திருமங்கலம் தொகுதியில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாமை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று பார்வையிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா என்ற வைரஸ் நோயை கட்டுப்படுத்தி இந்தியாவிற்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது என்று பாரதப் பிரதமர் கூட நமது முதலமைச்சரை பாராட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாது இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறையில் 143 விருது, பேரிடர் மேலாண்மை துறையில் இந்திய அளவில் சிறப்பாக செய்ததற்காக மத்திய அரசு பாராட்டு, நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம், மருத்துவத்துறையில் முதலிடம், மின்சாரத்துறையில் முதலிடம், கல்வித்துறையில் முதலிடம், உள்கட்டமைப்புத் துறையில் முதலிடம், தொழில் துறையில் முதலிடம் இப்படி அனைத்து துறைகளிலும் முதலிடத்தை உருவாக்கி தந்த முதலமைச்சருக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதைக்கண்டு பொறாமையால் எதிர்க்கட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கடந்த நான்காண்டுகளில் வழங்கிய திட்டத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகத்திற்கு 40 ஆண்டுகளுக்கான திட்டங்களை முதலமைச்சர் வழங்கியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் அம்மாவின் அரசு செய்துவரும் சாதனைகளை எண்ணிப் பாராமல் ஏதாவது குறை இருக்கிறதா என்று பூதக்கண்ணாடி வைத்து தேடுகிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த எதுவுமே கிடைக்கவில்லை. ஆனாலும் ஏதாவது ஒரு பொய் பிரச்சாரத்தை செய்துதான் வருகிறார்கள். இதனால் திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். வருகின்ற தேர்தலில் இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் திமுகவிற்கு தோல்வி தான் பரிசாக வழங்குவார்கள்.
கழகம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சிய முழக்கத்தை நிறைவேற்றும் வண்ணம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகத்திற்கு வெற்றி வாகை சூட முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்த இரு தலைவர்களும் அம்மாவிடம் பாடம் பயின்றவர்கள். அதனால் எதிர்க்கட்சிகள் தேர்தல் நேரத்தில் செய்யும் தில்லுமுல்லுகளை எப்படி எதிர்கொள்வது என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். 2021 சட்டமன்றத் தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றிபெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும். இந்த தேர்தலோடு திமுக என்ற கட்சியே இருக்காது.இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.