“பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறையிலும் அதலபாதாளத்திற்கு சரிந்து கிடக்கும் தமிழகத்தை மீட்பதற்கான போருக்கு அணி திரள்வோம்!” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோட்டில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசியதாவது, திராவிடர் கழகத்துக்குக் கொடியை உருவாக்க முயற்சித்தபோது, கருப்பு மையால் கருப்பு வண்ணத்தை வரைந்து, சிவப்பு மை இல்லாததால் தலைவர் கலைஞர் அவர்கள் தனது விரலில் குண்டூசியால் குத்தி தனது ரத்தத்தால் வண்ணம் பூசிய அந்த வரலாற்றுச் சம்பவம் நடந்த ஊரும் இந்த ஈரோடுதான்.இத்தகைய பெருமை வாய்ந்த மண்ணில் இருந்து ‘தமிழகம் மீட்போம்’ என்ற மாபெரும் பரப்புரையைத் தொடங்குவதில் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்து கொணடிருக்கிறது. இதனை ஆட்சி என்று கூட நான் சொல்ல மாட்டேன். இது ஆட்சி அல்ல, ஒரு காட்சி. அவ்வளவுதான். இதனை ஒரு கட்சியின் ஆட்சி என்றுகூடச் சொல்ல முடியாது; ஒரு கும்பலின் ஆட்சி இது. கட்சி என்றால் அதற்கு ஒரு தலைமை இருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க.வுக்கு தலைமையே இல்லை. யார் தலைவர் என்பதற்குத்தான் கடந்த நான்காண்டு காலமாக முட்டலும் மோதலும் நடக்கிறது.
ஆட்சியை வழிநடத்தும் முதலமைச்சருக்கோ துணை முதலமைச்சருக்கோ, அனைத்து அமைச்சர்களும் அனைத்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டுப்பட்டவர்கள் அல்ல. ஒருவர் கிழக்கே போனால் இன்னொருவர் மேற்கே போவார். ஒருவர் வடக்கே போனால் இன்னொருவர் தெற்கே போவார். இதுதான் அவர்கள் நடத்தும் ஆட்சியின் காட்சி. அ.தி.மு.க. என்ற கட்சிக்குத் தலைவரும் இல்லை, பொதுச்செயலாளரும் இல்லை. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்று பன்னீர்செல்வமும் பழனிசாமியும் ஆளுக்கு ஒரு நேம் போர்டு தயாரித்துக் கொண்டு அதன் கீழே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
கட்சியும் எல்லா விஷயத்திலும் இரண்டாக இருக்கிறது. எப்போது இரண்டாக உடைந்து விழுமோ என்ற நிலைமையில் ஒரு கண்ணாடித்துண்டு ஒட்டிக் கொண்டு இருப்பதைப் போல அ.தி.மு.க. என்ற கட்சியும் – அவர்களால் ஆளப்படும் அரசும் இருக்கிறது. அவர்களுக்கு கட்சி நடத்தவும் தெரியாது. ஆட்சி நடத்தவும் தெரியாது. ஏனென்றால் இருவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தப் பதவிக்கு வந்தவர்கள் அல்ல. ஒருவர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து பதவிக்கு வந்தார். இன்னொருவர் சசிகலா காலில் ஊர்ந்து போய் பதவிக்கு வந்தார். உழைக்காமல் நடித்து பதவிக்கு வந்த அவர்கள் இப்போதும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்ற வேஷங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார்.