இனிமேலும் மத்திய, மாநில அரசுகளால் ஏமாற்ற முடியாது.! டாக்டர் கிருஷ்ணசாமி கடும் தாக்கு.!

0
Follow on Google News

மோடி – எடப்பாடி இரு அரசுகளாலும் தேவேந்திரகுல வேளாளர்கள் ஏமாற்றப்படுகிறார்களா? மத்திய சமூகநீதித்துறை அமைச்சரின் கடிதம் சொல்லும் உண்மை என்ன? தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய காலம்தாழ்த்தும் காரணத்தை எடப்பாடி அரசு சொல்லவேண்டும்! பெரும் போராட்டத்திற்குத் தள்ளுகிறதா அதிமுக அரசு? என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தொல்காப்பியத்தில் மருதநில மக்களாக அடையாளப்படுத்தப்பட்ட தேவேந்திரகுல வேளாளர்கள் தனித்துவம் கொண்ட பூர்வீகத் தமிழ்க்குடி மக்கள். அந்நியர்களின் படையெடுப்புகளுக்கும் நில அபகரிப்புகளுக்கும் ஆளான தேவேந்திரகுல வேளாளர்கள் தங்களுடையப் பூர்வீக அடையாளத்தை மீட்டெடுப்பதற்காக நூறாண்டுகளாகப் போராடி வருகிறார்கள். புதிய தமிழகம் கட்சியின் முன்முயற்சியில் கடந்த முப்பது ஆண்டுகளாக பல்வேறு ஜனநாயக ரீதியானப் போராட்டங்களும், கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநாடுகள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் எனத் தீவிரமான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடுகளைப் பெற பல்வேறு சமுதாயங்கள் தங்களைக் கீழ் அடுக்கிலே வைப்பதற்குத் தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால், தேவேந்திரகுல வேளாளர்களோ தங்களைக் கீழடுக்கிலிருந்து விடுவித்து மேலடுக்கிற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று போராடுகிறார்கள். தேவேந்திரகுல வேளாளர்கள் மத்தியில் நிலவிய வறுமை மற்றும் சமூக ஒடுக்குமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆங்கிலேயர்கள் இம்மக்களை Depressed Classes பிரிவின்கீழ் வகைப்படுத்திவிட்டார்கள். 1927-ஆம் ஆண்டு ஆம்பூரை மையமாக வைத்து செயல்பட்டு வந்த ’இந்திரகுல போதினி’ இதழின் ஆசிரியர் சீனிவாசகம் பிள்ளை அவர்கள் தேவேந்திரகுல வேளாளர்களை Depressed Classes என்றழைக்கப்படக்கூடிய பிரிவில் சேர்ப்பதற்கு தன்னுடைய கடும் ஆட்சேபத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து தேவேந்திரகுல மக்கள் சட்டரீதியான மற்றும் ஜனநாயக ரீதியான வலுவான போராட்டங்களை மேற்கொள்ளாததால், சுதந்திரத்திற்குப் பிறகு குடியரசுத் தலைவர் அங்கீகாரமளித்து தயாரிக்கப்பட்ட முதல் அட்டவணைப் பிரிவில் தேவேந்திரகுல வேளாளர்களின் 6 உட்பிரிவுகளும் சேர்க்கப்பட்டுவிட்டன.

1921-ஆம் ஆண்டு பஞ்சமர் அல்லது Depressed Classes பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடார் சமுதாய மக்கள் அப்பிரிவிலே இருந்து தங்களை விடுவித்துக் கொண்டார்கள். சாணார் என்ற மதிப்புக் குறைவான வார்த்தைக்குப் பதிலாக நாடார் என்ற மதிப்பு மிகுந்தப் பட்டத்தையும் அவர்களால் பெறமுடிந்தது; 1929-ஆம் ஆண்டு வன்னியர் சமூக மக்கள் தங்களை வன்னியர் குல சத்திரியர்கள் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்கள். 26 வகை கவுண்டர் சமுதாய மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கொங்கு வேளாளர் என்றத் தொகுப்பு 1975-ல் உருவாக்கப்பட்டது. அதேபோல, பல்வேறு காலகட்டங்களில் முத்தரையர், முக்குலத்தோர் சமூக மக்களும் பெயர் மாற்றம் பெற்றிருக்கிறார்கள். எனவே பெயர் மாற்றம் என்பதும் பட்டியல் மாற்றம் என்பதும் புதிதானதும் அல்ல, முடியாததும் அல்ல.

தேவேந்திரகுல வேளாளர்களின் 6 உட்பிரிவுகளும் மத்திய அரசால் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட பட்டியல் பிரிவில் இடம்பெற்றிருப்பதால் அதிலிருந்து விலக்குப் பெற வேண்டுமெனில், இந்திய அரசியல் சட்டம் 341-வது பிரிவின்படி நாடாளுமன்ற செயல்முறைகளின் வாயிலாகவே அது முடியும். அதை நிறைவேற்றுவதற்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும். இதன் காரணமாகத் தான் நாம் தொடர்ந்து இரண்டு அரசுகளையும் வலியுறுத்திப் போராடி வருகிறோம். பாரதிய ஜனதா கட்சியின் அன்றைய தலைவரும், இன்றைய உள்துறை அமைச்சருமான அமித்ஷா அவர்கள் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதியன்று மதுரையில் தேவேந்திரகுல மக்கள் மத்தியில் பேசியபொழுது தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்குவதற்கு பாஜக அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அதே ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று தமிழ்நாடெங்குமுள்ள தேவேந்திரகுல மக்களின் 100 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாரதப் பிரதமர் மோடி அவர்களுடைய டெல்லி இல்லத்திற்கு அழைக்கப்பட்டு, அங்கே அவர்களுக்கு விருந்தளிக்கப்பட்டு, தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியல் வெளியேற்ற நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று அவரும் அதை உறுதி செய்திருந்தார்.

2011 முதல் 2016 வரையிலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் பலமுறை வெளிநடப்பு செய்திருக்கிறேன். 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி சென்னையில் மாநாடு, டிசம்பர் 6-ஆம் தேதி டெல்லியில் பாராளுமன்றம் நோக்கிப் பேரணி, 2018-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி மதுரையில் உண்ணாவிரதம், மே 6-ஆம் தேதி விருதுநகர் – பட்டம்புதூரில் மாநாடு, ஆகஸ்ட் 6-ஆம் தேதி குற்றாலத்தில் மகளிரணி மாநாடு, அக்டோபர் 6-ஆம் தேதி திருச்சியில் இளைஞரணி மாநாடு, நவம்பர் 15-ஆம் தேதி சென்னையில் பிரிட்டிஷ் துணை தூதரகம் நோக்கிப் பேரணி, டிசம்பர் 15-ஆம் தேதி சேலத்தில் மாநாடு, 2019-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி கோவையில் உண்ணாவிரதம், பிப்ரவரி 6-ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் என புதிய தமிழகம் கட்சி சார்பாக அடுக்கடுக்கான மாநாடுகளும் போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஒவ்வொரு மாவட்டமும் சுற்றுப்பயணம் செய்து ஆயிரக்கணக்கான கிராம மக்கள் சார்பாக அளிக்கப்பட்ட மனுக்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடத்தில் சமர்ப்பித்துள்ளேன்.

2019-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மதுரையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என்று மீண்டும் வாக்குறுதி அளித்துப் பேசினார். புதிய தமிழகம் கட்சியின் தொடர்ச்சியான போராட்டங்களின் காரணமாக 2019, பிப்ரவரி 27-ஆம் தேதி, மூத்த IAS அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா அவர்கள் தலைமையில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக்குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி நியமிக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் (Anthropology) ஆய்வுக்குழு சார்பாக தமிழ்நாடெங்கும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கையும், பரிந்துரையும் தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போதும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின்போதும், ’தேர்தல் முடிந்தவுடன் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிக்கப்படும்’ என்று எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்ற பின்னரும் அரசாணை பிறப்பிக்கப்படாததால், அதைத் தொடர்ந்து நடைபெற்ற நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள்.

தமிழ்நாடெங்கும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாகவும், பல்வேறு ஆர்வலர்கள் சார்பாகவும் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக, 16.10.2019 அன்று ஹன்ஸ்ராஜ் வர்மா அவர்கள் தலைமையிலான குழு கூடி, பல்வேறு அமைப்புகளின் கருத்துகளைக் கேட்டறிந்தது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் வாழுகின்ற தேவேந்திரகுல மக்கள் அனைவரது கோரிக்கையும் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் மற்றும் பட்டியல் வெளியேற்றம் தான் என்பதற்கு ஆதாரமாக மத்திய, மாநில அரசுகளிடத்தில் தேவைக்கு அதிகமான தரவுகளை நாம் சமர்ப்பித்துவிட்டோம். எல்லாவிதமான தரவுகளையும் சேகரித்து தன்னகத்தே வைத்துக் கொண்ட தமிழக அரசு, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யாமல் திட்டமிட்டு, தொடர்ந்து காலம்தாழ்த்தி வருகிறது. புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவேந்திரகுல மக்களின் கோரிக்கையினுடைய முழு அம்சத்தையும் பிரதமர் அலுவலகமும், மத்திய உள்துறை அமைச்சகமும், மத்திய சமூகநீதித்துறை அமைச்சகமும் நன்கு அறியும். மாநில அரசு காலம்தாழ்த்துமேயாயின் மத்திய அரசினுடைய துறைகள் தாமாகவே முன்வந்து அந்தத் தகவல்களைக் கேட்டுப்பெற முடியும்.

இன்றைய மத்திய அரசுக்கு தேவேந்திரகுல வேளாளர்கள் கோரிக்கை குறித்த பரிந்துரையை மாநில அரசிடமிருந்துக் கேட்டுப் பெறுவது பெரிய காரியம் அல்ல; மத்திய அரசின் ஒரு துறையின் துணைச் செயலாளர் மூலமே இதைச் செய்து முடிக்க முடியும். ஆனால் மத்திய அரசும் இதுவரையிலும் நமது கோரிக்கையை நிறைவேற்ற எவ்வித முனைப்பும் காட்டியதாகத் தெரியவில்லை.

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் அவர்கள் இந்த மாதம் எழுதிய கடிதமே இதற்குச் சான்று. பட்டியல் மாற்றமும் பெயர் மாற்றமும் ஒருசேர நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்தபொழுது, பட்டியல் மாற்றம் செய்ய காலதாமதம் ஆகும், பெயர் மாற்றம் வேண்டுமென்றால் உடனடியாகச் செய்துவிடலாம் என்று, பலபேர் குறுக்கு உழவு ஓட்டினார்கள்; மேதாவித்தனமாகப் பேசினார்கள். ஆனால், நவம்பர் 18-ஆம் தேதியன்று மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் அவர்கள் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எழுதிய கடிதத்தில், ”மாநில அரசு பரிந்துரை செய்து அனுப்பினால் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் மூலமாக பட்டியல் மாற்றம் செய்துவிடலாம்” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். எனவே சட்ட விதிமுறைகள் தெளிவாக இருக்கின்றபோதும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பட்டியலிலிருந்து வெளியேறுவதற்குப் பரிந்துரை செய்ய எடப்பாடி அரசுத் தயக்கம் காட்டுவது ஏன்? பாரதப் பிரதமர் மோடி அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி ஆகியோரின் வாக்குறுதிகள் வெறும் கானல்நீர் தானா?

இரு அரசுகளின் நடவடிக்கைகளும் உள்ளும் புறமும் இருந்தும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் தேவேந்திரகுல மக்களுக்கு வஞ்சனை செய்கின்றனவோ என்ற ஆதங்கம் இலட்சோபலட்சம் தேவேந்திர குல மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இப்பொழுது முழு உண்மையும் வெளியே வந்துவிட்டது. இன்று வந்துவிடும், நாளை வந்துவிடும் என்று எவரும் இனி பொய்யுரைக்க முடியாது, போலிப் போராட்டங்களும் நடத்த முடியாது. ”சிலரை சில காலம் ஏமாற்றலாம்; பலரை சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்றிவிட முடியாது.”

ஆம்! தேவேந்திரகுல வேளாளர்களை இனிமேலும் மத்திய, மாநில அரசுகளால் ஏமாற்ற முடியாது. பட்டியல் என்ற சாதிச் சிறையிலிருந்து விடுபடுவதற்காகத் தான் அப்பட்டியல் உருவாவதற்குக் காரணமாக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இலட்சக்கணக்கான மக்களோடு, தனதுப் பூர்வீக இந்து அடையாளங்களைத் துறந்து பெளத்தம் என்ற புதிய அடையாளத்தைத் தழுவிக் கொண்டார். தேவேந்திரகுல வேளாளர்கள் இந்துக்கள் என்ற தங்களுடையப் பாரம்பரிய அடையாளத்தை இழக்காமல் பட்டியலிலிருந்து வெளியேற நினைக்கிறார்கள்.

அரிஜன், தலித், தாழ்த்தப்பட்டோர் போன்ற முகவரியற்ற இழிவுச் சொற்களை இனியும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. பட்டியல் வெளியேற்றத்தை வென்றெடுக்க எவ்விதப் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் தேவேந்திரகுல மக்கள் அஞ்சக்கூடியவர்களும் அல்ல; தயங்கக்கூடியவர்களும் அல்ல.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே எங்களுடைய கோரிக்கை வெற்று அரசியல் கோஷம் அல்ல; இது தேவேந்திரகுல மக்களின் விடுதலைக்கான முழக்கம். எனவே பட்டியல் மாற்றம் மற்றும் பெயர் மாற்றத்திற்காக மத்திய அரசு கோரும் அனைத்துத் தரவுகளையும், மாநில அரசின் பரிந்துரையையும் உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வையுங்கள். வீணாகக் காலம்தாழ்த்தாதீர்கள்; இந்த மண்ணின் மூத்தக்குடி மக்கள், உழைக்கும் மக்கள், சேர, சோழ, பாண்டிய வம்சத்தின் வழித்தோன்றல்கள் உங்கள் அரசால் வஞ்சிக்கப்பட்டார்கள், ஏமாற்றப்பட்டார்கள் என்றப் பழிச்சொல்லுக்கு ஆளாகாதீர்கள்; ”அரசு அன்று மட்டுமே வெல்லும்; அறம் நின்று வெல்லும்” என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். என டாக்டர்.க.கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.