விழுங்கப்பட்ட மாத்திரைகளில் இருந்த தங்கம் கடத்தல்.!துபாயிலிருந்து வந்த முகமது ரியாஸ் கைது.!

0
Follow on Google News

தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மார்ச் 10 அன்று எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ரியாஸ், 39, என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும் வழியில் அதிகாரிகள் இடைமறித்தனர்.

விசாரணையின் போது படபடப்பாக காணப்பட்ட அவர், தங்கப் பசை ஒளித்து வைக்கப்பட்ட கேப்சூல் வடிவ மாத்திரைகளை விழுங்கியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவரது பையை சோதனை செய்தபோது 4 ஐபோன் 12 புரோ கைபேசிகள், 6 ஆப்பிள் கைக்கடிகாரங்கள் மற்றும் 5 புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் 6.85 லட்சம் ஆகும்.

அவரது வேண்டுகோளின்படி, விழுங்கப்பட்ட மாத்திரைகளில் இருந்து தங்கத்தை வெளியே எடுப்பதற்காக, பேராசிரியர் டாக்டர் டி சிவகுமார் மற்றும் பேராசிரியர் டாக்டர் ரேவதி ஆகியோரின் மருத்துவ கண்காணிப்பின் கீழ் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அதே நாளன்று அவர் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரத்திற்குப் பிறகு, 372 கிராம் எடையுடைய 34 மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டன. அவற்றிலிருந்து 281 கிராம் எடையுடைய ரூபாய் 13 லட்சம் மதிப்பிலான தங்கம் சுங்க சட்டத்தின்கீழ் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடமிருந்து, மொத்தம் ரூபாய் 19.85 லட்சம் மதிப்புடைய மின்னணு பொருட்கள் மற்றும் விழுங்கப்பட்ட மாத்திரைகளில் இருந்த தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்தி குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.