“பிரதமர் என்பதை மறந்து தரம்தாழ்ந்து திமுக குறித்து ஆதாரமின்றி – அபாண்டமாக பொய் பேசுவதற்கு நா கூச வேண்டாமா? திரு. மோடி அவர்களே, உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் தமிழகத்தில் பலிக்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார், தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, தமிழ்நாட்டிற்குப் பிரதமர் மோடி வந்து விட்டுச் சென்றிருக்கிறார். வழக்கம்போல பேச வேண்டியவற்றைப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்.
வழக்கம் போல் என்ன பேசுவார்? பொய் பேசுவார். அவ்வாறு பேசிவிட்டு, மோடி மஸ்தான் வேலைகள் செய்வார் அல்லவா, அதைப் பேசி விட்டுச் சென்றிருக்கிறார். இப்போது சொல்கிறேன், நீங்கள் என்ன பொய்ப் பிரச்சாரம் செய்தாலும் உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இந்தத் தமிழ்நாட்டில் எடுபடாது. பிரதமர் மோடி அவர்களே…! இதற்கெல்லாம் உதாரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் என்ன ஆனது? உங்களால் ஒரு சீட்டாவது தமிழ்நாட்டில் வர முடிந்ததா? அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஏதோ தி.மு.க., பெண்களைக் கேவலப்படுத்தி விட்டதைப் போல, ஜெயலலிதாவைக் கேவலப்படுத்திவிட்டதைப் போல ஒரு பொய்யை, தாராபுரம் மேடையில் பிரதமர் சொல்லிவிட்டுச் செல்கிறார். சுப்பிரமணியன் சுவாமி அவர்களைக் கேளுங்கள், என்ன நடந்தது என்று தெரியும்.
ஒரு ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி சந்திரலேகா அவர்களுக்கு முகத்தில் திராவகத்தை ஊற்றி அவருடைய முகம் இன்றைக்கும் சின்னாபின்னமாக இருக்கும் காட்சியைப் பார்க்கலாம். அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எனவே உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், இவ்வாறு பொய் பேசுவதற்கு நா கூச வேண்டாமா? எனவே நான் மீண்டும் மீண்டும் பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்ள விரும்புவது, கொஞ்சம் யோசித்து, சிந்தித்துத் தெரிந்துகொண்டு, ஆதாரங்கள் இருந்தால் பேசுங்கள். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை என முக ஸ்டாலின் பேசினார்.