குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயலாமல், பொறுமையாகக் காத்திருந்து மக்களைச் சந்தித்து அவர்கள் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று உறுதியாக இருந்து சாதித்த நேர்மை மிகச் சிறப்பு என முதல்வராக பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை, அவர் மேலும் தெரிவித்துள்ளதவாது.
மிகக் கடினமான காலகட்டத்தில், பேரிடர் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கிறீர்கள். வாரிசு அரசியல் என்று குறிப்பாக உங்களைச் சொல்ல வழி வைக்காமல், வாரிசாகவே இருந்தாலும் அரசியல் வழியினூடாகவே இந்தப் பதவியை அடைந்திருக்கிறீர்கள். உங்கள் வழிப்பயணத்தில் மாநகரத் தந்தை உள்ளிட்ட நிர்வாகப் பொறுப்புகளை செவ்வனே ஆற்றிய அனுபவம் உடையவர் என்ற முறையில், இந்த இடர் காலத்தை சிறப்பாகக் கையாள்வீர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.
தேர்தல் அறிக்கையில் சிறப்பான பல கூறுகளைக் கண்டேன். தமிழ், தமிழர்நலம் ஆகியவற்றை மனதில் வைத்து அறிவிக்கப் பட்டிருக்கும் அந்த உறுதிமொழிகளை விரைவில் செயல்படுத்தத் தொடங்குவீர்கள் என்று நம்புகிறேன். ஆட்சியில் யார் வந்தாலும் இனி ‘தமிழர் நலம்’ என்பதை முன்வைக்காமல் ஆட்சி நடத்த முடியாது என்று தேர்தலுக்கு முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். இப்போது உங்கள் ஆட்சியில் இங்கேயும் தனிப் பெரும்பான்மை, தில்லியிலும் நனிபெரும்பான்மை என்கிற சிறப்பான சூழ்நிலை அமைந்திருக்கிறது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தமிழ்நாடு தன்னிரகற்ற நிலையை அடைய, இழந்த நம் உரிமைகளைப் பெற, தமிழ்நாட்டின் இறையாண்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பீர்கள் என்று உளமார நம்புகிறேன்.
மொழி அழிந்தால் இனம் அழியும் !தமிழ்தான் நம்மைப் பிணைக்கும் உயிர்க் கயிறு ! அதனால்தான் அதை அறுக்க இத்தனை சதிகள் !. வெற்றிகரமாக அந்த சதிகளை முறியடித்து முற்றுகையிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுப்பீர்கள் என்று நம்புகிறேன். திராவிடம் என்பது பழகிப்போன சொல்லாடல் ! திடீரென்று அதை உங்கள் நிலையில் கைவிட முடியாது. திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழர் முன்னேற்றக் கழகமாகப் பெயர் மாற்றம் செய்து விட முடியாதுதான் !. ஆனால் பெயர் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும், செயலால் நீங்கள் தமிழர் முன்னேற்றத் தலைவர் என்பதைக் காட்டுங்கள். தமிழின் ஆகச் சிறந்த சொல், ‘செயல்’ அல்லவா ?
உங்களைச் சுற்றி இப்போது பல தமிழ்த்தேசிய சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். இளைஞர்கள் பலர் வெற்றி பெற்றும் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அதிகார மிக்க பதவிகளை அளியுங்கள், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் . கல்வி கேள்விகளில் சிறந்த தமிழ்நாடு, மருத்துவம் அறிவியல் தொழில்நுட்பம் என எதிலும் சோடை போகாத தமிழ்நாடு ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் கொடிகட்டிப் பறந்தது என்று வரலாறு சொல்லும் வண்ணம் சிறப்புற ஆட்சி நடத்த வாருங்கள் என்று அழைக்கிறேன்.
” வேல் அன்று வென்றி தருவது மன்னவன் கோல் அதூம் கோடாது எனின் ” – செங்கோன்மை அதிகாரம்.
உங்கள் நல்லாட்சியே உங்களுக்கு அரணாக அமையட்டும் என கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.