மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் சரவணன், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட திமுகவில் வாய்ப்பு கிடைக்காததால், காலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டு மதியம் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலில் தோல்வியை தழுவிய சரவணனுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்கிற அடிப்படையில், மதுரை நகர் மாவட்ட பாஜக தலைவராக நியமித்தது பாஜக தலைமை.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி வளர்ச்சிக்காக முழு சுதந்திரம் டாக்டர் சரவணனுக்கு கொடுத்தார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் திமுக அமைச்சர் பிடிஆர் மற்றும் பாஜகவினருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் பிடிஆர் வாகனம் மீது பாஜகவினர் செருப்பு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் மதுரை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் நடந்த அன்று மதியம் பாஜகவுக்கு ஆதரவாகவும் பிடிஆரை மிக கடுமையாக பேசிய சரவணன், அன்று இரவு பிடிஆர் வீட்டில் நேரில் சந்தித்து தான் பாஜகவில் இருந்து விலகுவதாகவும், மேலும் திமுகவுக்கு புகழாரம் சூட்டினார். இதன் பின்பு தொடர்ந்து பல பேட்டிகளில் பாஜகவை கடுமையாக பேசியும், திமுகவிற்கு ஆதரவாகம் பேசி வந்த சரவணன், திமுகவில் தனக்கு மாவட்ட செயலாளர் போன்ற முக்கிய பதவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்துள்ளார்.
ஆனால் அவரை திமுகவில் இணைத்து கொள்ள கூட தயாரக இல்லை திமுக தலைமை. முதல்வர் மு க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்கவில்லை. இதனால் மிகப்பெரிய ஏமாற்றமடைந்த சரவணன், மீண்டும் பாஜக பக்கம் வருவதற்கான முயற்சியில் சமீப காலமாக ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் பல வகையில் முயற்சி செய்தும் அண்ணாமலை தரப்பை தொடர்பு கொண்டு தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்த முடியதவாறு அவருக்கான கதவுகள் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் மதுரை சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவரின் உதவியை நாடிய சரவணன், பாஜகவில் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பேசி பாஜகவில் மீண்டும் என்னை இணைக்க உதவி செய்யவேண்டும் என கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. அதற்கான முயற்சியில் ஈடுபட்ட அந்த மதுரையை சேர்ந்த பாஜக நிர்வாகி சமீபத்தில் சென்னை சென்றவர், சரவணனை சென்னை வர வைத்துள்ளார்.
இருவரும் சென்னையில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளார்கள். சரவணன் அங்கிருந்தே மதுரை பாஜக நிர்வாகி மூலம் அண்ணாமலையிடம் தான் மீண்டும் பாஜகவுக்கு வருவது குறித்து தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து அண்ணாமலையை சந்திக்க முயற்சி செய்துள்ளார் சரவணன். இந்த தகவல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கவனத்துக்கு சென்றுள்ளது, உடனே இதை பற்றி யோசிக்கவே வேண்டாம், சரவணன் இனி பாஜகவுக்கு தேவையில்லை என தெரிவித்துவிட்டார் அண்ணாமலை என்கிறது பாஜக வட்டாரங்கள்.
மேலும் பாஜகவில் மீண்டும் சரவணனை இணைக்க தரகர் வேலை பார்த்த மதுரையைச் சேர்ந்த அந்த பாஜக நிர்வாகிக்கு அண்ணாமலை தரப்பிலிருந்து செம டோஸ் விழுந்ததாக கூறப்படுகிறது. சரவணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோது அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என மாநில தலைவர் அறிவுறுத்தி இருந்த நிலையில், நீங்கள் எப்படி சரவணனை மீண்டும் கட்சியில் இணைக்க அழைத்து வரலாம்.?
அப்படியானால் சரவணன் உடன் அரசியல் ரீதியாக உங்களுக்கு இன்னும் தொடர்பு இருக்கிறதா.? என பாஜக தலைமை செம்ம டோஸ் கொடுத்துள்ளது.