நீட் தேர்வு என்ற விஷயத்தை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து மாணவர்களுக்கு துரோகம் இழைத்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர், “ஆளுநருக்கு அழுத்தம் தரவில்லை” என்று கூறுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.
ஏழை எளிய மாணவர்கள், குறிப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்கவும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உள்ள வசதிகளும், வாய்ப்புகளும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை கருத்தில் கொண்டும், அவர்களுக்கும் சமநீதியும், சமவாய்ப்பும் கிடைக்க வழிவகை செய்ய, அம்மாவின் அரசு தான், உள் ஒதுக்கீடு வழங்கி, அதனை செயல்படுத்த ஆணையம் ஒன்றை அமைத்து, அவ்வாணையத்தின் அறிக்கையைப் பெற்று, அதன்படி 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு சட்ட முன் வடிவிற்கு சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற்று, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்த உள் ஒதுக்கீட்டு சட்ட முன்வடிவை அம்மா அவர்களின் அரசு விரிவான ஆய்வுக்குப்பின் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் நீலிக்கண்ணீர் வடிப்பது, மக்களின் மனங்களில் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாது என்பது திண்ணம்.
வெண்ணை திரண்டு வரும் நேரத்தில், தங்களால் தான் எல்லாம் நடந்தது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் எண்ணத்துடன் ஆளுநருக்கு கடிதம், அறிக்கைகள் என எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள், “அரசியல் ஆதாயம் தேடும் செயல்” மட்டுமே என்று நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
அம்மாவின் அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. மேலும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது.
அம்மாவின் அரசு எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும், நோய்த் தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வருகின்றது. கொரோனா நோய் தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்திட தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பது உலக மக்கள் அனைவரும் அறிந்ததே. அதனை ஆவலுடன் அனைவரும் எதிர்பார்க்கும் இவ்வேளையில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை மிக வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்த அம்மாவின் அரசால், மக்களின் நலன் கருதி, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி போடப்படும் என்று நான் அறிவித்தேன்.
ஏற்கனவே கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் அம்மாவின் அரசுக்கு இருந்து வரும் நற்பெயரைக் கண்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி அடைந்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மேற்கண்ட இந்த புதிய அறிவிப்பினால் தமிழ்நாடு அரசுக்கு மக்கள் ஆதரவு அமோகமாக பெருகி வருகிறதே என்ற அச்சத்தின் காரணமாக வழக்கம் போல் அறிக்கை அரசியல் நடத்துகிறார். இதனை பார்த்து, தமிழ்நாட்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.