இந்த விஞ்ஞான உலகத்தில் எப்படி கதை விடுகிறார் ஸ்டாலின் பாருங்கள்.! ஸ்டாலின் ஏமாற்ற முடியாது.! முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு.!

0
Follow on Google News

எடப்பாடி தொகுதியில் எந்த பணியும் நடக்கவில்லை என்று பச்சைப் பொய் பேசுகிறார் ஸ்டாலின் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும் அவர் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது, ஸ்டாலின் போகும் இடங்களிலும் திண்ணையில் பெட்ஷீட் விரித்து போட்டு, அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் குறை கேட்கிறாராம்.

இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது மக்களை பற்றி சிந்திக்கவே இல்லை. மக்களின் குறைகளை கேட்கவும் இல்லை, தீர்க்கவும் இல்லை. தற்போது ஆட்சியில் இல்லாத போது மக்களிடம் மனுக்களை வாங்கி, அதை பெட்டியில் போட்டு, பூட்டி சீல் வைத்து, ஆட்சிக்கு வந்தவுடன், அந்த பெட்டியை திறந்து, 100 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காண்பாராம். எப்படி கதை விடுகிறார் பாருங்கள். இது விஞ்ஞான உலகம். அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. தகவல்கள் உடனுக்குடன் செல்கிறது.

ஆகவே மக்களை முன்பு போல ஸ்டாலின் ஏமாற்ற முடியாது.தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் 9,77,638 மனுக்கள் வழங்கப்பட்டன. அதில் 5,22,812 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. மக்களை சந்தித்து, மனுக்களை வாங்கி, தீர்வு கண்ட அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம். உங்களை போல பெட்டியில் போடுகின்ற அரசாங்கம் அல்ல.

அதேபோல சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சரின் உதவி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தந்து, அதை செயல்படுத்திய அரசும் அம்மாவின் அரசு தான். இதன்மூலம் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் தங்கள் செல்போனில் 1100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு குறைகளை சொன்னால், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இங்கு மனு வாங்குகின்ற வேலையும் இல்லை, பெட்டியில் போடுகின்ற வேலையும் இல்லை, பூட்டுகின்ற வேலையும் இல்லை. உங்கள் திட்டத்திற்கே பூட்டு போட்டாகி விட்டது.

ஸ்டாலின் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இந்த எடப்பாடியிலே ஒரு கூட்டத்தைப்போட்டு பேசினார். இந்த எடப்பாடி தொகுதியிலே எந்த பணியும் நடைபெறவில்லை என்றும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பழனிசாமி இருக்கின்றார். ஆனால், இந்த தொகுதிக்கு எந்த நலத்திட்ட உதவியும் கிடைக்கவில்லை என்று ஒரு பச்சைப்பொய் கூறிவிட்டு சென்றுள்ளார்.

2011 மற்றும் 2016-ம் ஆண்டு இந்த தொகுதியிலே நின்று வெற்றிபெற்றேன். 2011-ம் ஆண்டுக்கு முன்பு இந்த தொகுதி எப்படி இருந்தது. தற்போது 2011 முதல் 2021 வரை எப்படி உள்ளது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த 10 ஆண்டு காலத்திலே நீங்கள் வைத்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நான் நிறைவேற்றியுள்ளேன்.