தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உருவாக்கப்பட்ட ஊர்திக்கு இந்த நிபுணர் குழு அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் இந்த விவகாரம் பெரும் அரசியலாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், இதற்கு பதிலளித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுதியுள்ள கடிதத்தில், குடியரசுத் தினவிழாவில் பங்கேற்கும் ஊர்திகளை தேர்வு செய்வதில் தலைசிறந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு அமைச்சகங்கள்/ துறைகளிடம் இருந்து பெறப்படும் பரிந்துரைகளை கலை, கலாச்சாரம், ஓவியம், சிற்பக்கலை, இசை, கட்டிடக்கலை, நடனத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய நிபுணர் குழு பரிசீலனை செய்கிறது.
கருபொருள், கருத்து, வடிவமைப்பு மற்றும் காட்சி தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஊர்திகளை நிபுணர் குழு தேர்வு செய்கிறது. 2022ம் ஆண்டு குடியரசுத் தின அணிவகுப்பிற்கு 29 பரிந்துரைகள் வரபெற்றன. இதில், தமிழகத்தின் ஊர்தி முதல் மூன்று சுற்று சந்திப்புகளில் இடம்பெற்றது. அதன் பின்னர், தமிழகத்தின் ஊர்தியால் இறுதி பட்டியலுக்கு தேர்வாக முடியவில்லை. கடந்த 2017,2019, 2020,2021 ஆகிய ஆண்டுகளில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் ஊர்தி பங்கேற்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக அலங்கார ஊர்தி மாதிரி புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தது போன்று ஒரு செய்தி வைரலாகி வருகிறது, அதில், குடியரசு தின அலங்கார ஊர்தியில் தமிழக அரசு சார்பாக அனுப்பப்பட்ட வாகனத்தில் கருணாநிதி மற்றும் அவரின் இணைவியார் ரசத்தியம்மாள் சிலை வைக்கப்பட்டுள்ளதால் தமிழக அலங்கார வாகனம் நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் தற்போது வந்துள்ளது.
இதனை திமுக அரசு தவிர்த்து இருக்கலாம் என தமிழக அரசுக்கு கார்த்திக் சிதம்பரம் அறிவுரை வழங்கியதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இந்த செய்தி உண்மையில்லை என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்ததை தொடர்ந்து இது போலியான செய்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக அலங்கார ஊர்தி புகைப்படத்தில் சில மாற்றங்களை செய்து கருணாநிதி போன்று சித்தரித்துள்ளதால். தமிழக அலங்கார ஊர்தியில் கருணாநிதி – ரசத்தியம்மாள் சிலை இடம்பெற்றுள்ளதாக சிலர் பொய்யான தகவலை பரப்பி வருவது குறிப்பிடதக்கது.