வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல எங்கள் கட்சியை உடைக்க முயன்ற தி.மு.க. அழகிரி கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் உடையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் முதலமைச்சர் பேசுகையில், திமுக மத்தியில் 13 வருடங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தீர்கள். அப்பொழுது தமிழ்நாட்டு மக்களுக்காக ஏதாவது திட்டங்கள் கொண்டு வந்தீர்களா, காவேரி பிரச்சனை தீர்க்கப்பட்டதா, இல்லை. கருணாநிதி டெல்லி செல்லும் போது எல்லாம் குடும்ப நலனுக்காகவே சென்றார்.
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மத்திய மந்திரி சபையில் வலுவான இலாக்காவை பெறுவதற்காகவும், சிறையில் இருக்கும் அவரது மகள் கனிமொழியை பார்க்கவோ தான் சென்றார், மக்களுக்காக செல்லவில்லை. திமுக ஒரு வாரிசு கட்சி. வாரிசு அரசியல் அங்கு நடைபெறுகிறது. கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், அதற்கு பிறகு தற்போது அவரது மகன் உதயநிதி. சாமானிய மக்கள் அங்கே வளர முடியாது. ஆனால் அண்ணா திமுக அப்படியல்ல. என்னைப் போன்ற சாமானிய விவசாயியும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக வர முடியும்.

அடிக்கடி ஸ்டாலின் நான் கலைஞர் மகன் என்று கூறி வருகிறார். அதில் என்ன சந்தேகம். இவர் கலைஞர் மகன் தான். ஆனால் இவர் மட்டும் கலைஞர் மகன் கிடையாது. கலைஞருக்கு பல மகன்கள் இருக்கிறார்கள். அதில் இவர் ஒருவர். மதுரையிலும் கலைஞர் மகனான மு.க.அழகிரி இருக்கிறார். அவர் தற்போது கட்சி தொடங்க உள்ளதாக செய்தி வருகிறது. அவர் கட்சி தொடங்கினால் தி.மு.க. நிச்சயம் உடையும். எங்கள் கட்சியை உடைக்க பார்த்தீர்கள். வினை விதைத்தவன், வினை அறுப்பான், அதுபோல தற்போது உங்கள் கட்சி தான் உடைய போகிறது.
ஸ்டாலின் இப்போதுதான் புகார் பெட்டி வைத்திருக்கிறார். இவர் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சி துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அப்பொழுதெல்லாம் மக்களைப் பார்க்க வில்லை, மக்களின் கோரிக்கையை கேட்கவில்லை. காலம் போன கடைசியில் புகார் பெட்டி வைத்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுகிறாராம். என்ன ஒரு ஏமாற்று வேலை. எண்ணிப்பாருங்கள் மக்களே. இப்படி எல்லாம் கவர்ச்சியாக பேசி ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார் ஸ்டாலின். அவரது கனவு ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.