கருணாநிதியாலே முடியவில்லை. ஸ்டாலினால் முடியுமா? தொட்டுக்கூட பார்க்க முடியாது.! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால்.!

0
Follow on Google News

அதிமுக தேர்தல் அறிக்கை மக்களுக்கு நன்மை பயக்கும் அட்சயப் பாத்திரம் போன்றது. ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கை நீர் வற்றிப்போன கிணறு என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் திருமங்கலம் தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

அதிமுக வெளியிட்டுள்ள கழக தேர்தல் அறிக்கை மக்களுக்கு நன்மை பயக்கும் அட்சய பாத்திரம் ஆகும். ஆனால் திமுகவின் தேர்தல் அறிக்கை நீர் வற்றிய கிணறு போன்று உள்ளது. ஸ்டாலின் அறிக்கை நாயகன். ஆனால் நமது முதலமைச்சரோ திட்டங்களை செயல்படுத்தும் நாயகனாக உள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் எண்ணற்ற சாதனை திட்டங்களை அம்மா அரசு செய்துள்ளது.

திருமங்கலம் தொகுதியில் 5 ஆண்டில் மக்களின் தேவைகளை நிறைவேற்றி உள்ளோம். திருமங்கலம் தொகுதியில் இரட்டைஇலை மாபெரும் வெற்றி பெறும் என்ற சர்வேயை கண்டு சிலர் பொறாமை கொண்டு பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகின்றனர். அதனை ராணுவ கட்டுப்பாட்டோடு நாம் செயல்பட்டு முறியடிக்க வேண்டும்.

இரட்டை இலையை ஒழிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறுகிறார். கருணாநிதி இருக்கும்போது இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்டாலினால் முடியுமா? கழகத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. இந்த இயக்கம் மாபெரும் எஃகு கோட்டையாகும். அதேபோல் இரட்டை இலையில் முகவரி பெற்று வாழ்க்கை, அதிகாரம் பெற்ற சிலர் இரட்டை இலையை அழிக்கப்போவதாக பேசி வருகின்றனர். இரட்டை இலையை அழிக்க யாரும் பிறக்கவில்லை.

எவரும் பிறக்கப் போவதுமில்லை. இங்கு நடைபெறும் தேர்தலில் துரோக கூட்டமும், எதிரி கூட்டமும் சேர்ந்து நம்மை எதிர்க்கிறது. இந்த தர்மயுத்தத்தில் வெற்றி பெறப்போவது நாம் தான். முதலமைச்சர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளை மக்களிடத்தில் நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும். திட்டங்கள் இன்னும் போதாது என்றால் நாட்டின் மக்களுக்காக தன்னையே கொடுப்பார் முதலமைச்சர்.

தேர்தல் ஆணையம் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாம் பொறுமை காத்து அமைதியாய் இருந்து இரட்டை இலையை நாம் வெற்றிபெற செய்ய வேண்டும். சில பேர் வருவார்கள். தேர்தல் முடிந்தவுடன் சென்று விடுவார்கள். நாம் நிற்போம். வென்று காட்டி மக்களுக்கு நிரந்தரமாக பணி செய்வோம். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.