அஞ்சல் துறை தேர்வுகளுக்கான மொழிகளின் பட்டியலில் தமிழ் இல்லை என பல்வேறு தலைவர் அறிக்கை வெளியிட்டுவரும் நிலையில், அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பது கூறியதாவது, அஞ்சல் துறை தேர்வுகளுக்கான மொழிகளின் பட்டியலில் தமிழ் இல்லை என்று பொங்கி எழுந்துள்ளார்கள் தமிழகத்தின் சில அரசியல்வாதிகள். தற்போதய இந்த தேர்வானது புதிய பணி நியமனத்திற்கு அல்ல.
ஏற்கனவே பணியிலிருக்கும் தபால் உதவியாளர்கள், மற்றும் தபால்களை வரிசைப்படுத்தும் பணியாளர்களுக்கான துறை சார்ந்த தேர்வு என்பது தெரியாமலேயே மொழி ரீதியாக மக்களை தூண்டிவிடும் மலிவு அரசியலை செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இந்த தேர்வுகள் இப்படி தான் நடக்கின்றன. இந்த தேர்வில் மொழி சார்ந்த கேள்விகளோ, பொது அறிவு, அரசியல்,வரலாறு போன்ற எந்த பாடங்களும் இடம்பெறாது.
ஏற்கனவே பல வருடங்களாக பணியில் உள்ளவர்கள், தங்கள் பணியினை , அவர்கள் உபயோகிக்கும் ‘தபால் கையேட்டின்’ அடிப்படையிலேயே இந்த தேர்வுகள் நடத்தப்படும். மேலும் இந்த தேர்வானது தபால் கையேடுகளை பார்த்தே எழுதக்கூடிய நிலையில், வேறு மொழிகளில் இந்த தேர்வை எப்படி நடத்த முடியும் என்பதை கூட புரிந்து கொள்ளாமல் அறிக்கைகளை அரசியல் தலைவர்கள் விடுப்பது பொறுப்பற்ற செயலே. மேலும், 60 வருடங்களுக்கும் மேலாக இந்த தபால் கையேடுகள் அலுவல் மொழிகளான ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது நாள் வரை எப்படி இந்த துறை ரீதியான தகுதி தேர்வுகள் நடைபெற்று வந்ததோ அதே முறையிலேயே நடைபெறுகிறது. அப்படியானால் தற்போது அறிக்கை விடுப்பவர்களுக்கு இது நாள் வரை தமிழ் பற்று இல்லாதது ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்வார்களா? உண்மையில், இது பதவி உயர்வுக்கான, ஊதிய உயர்வுக்கான தேர்வோ அல்ல. தபால் துறையில் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு செல்ல விரும்புவோருக்கான ‘தகுதி தேர்வு’ மட்டுமே.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள தபால் கையேட்டை பார்த்து எழுதும் வகையில் இந்த தேர்வு நடைபெறுவதால், எந்த ஒரு தபால் ஊழியரும் தமிழில் தான் தேர்வு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வைக்காத நிலையில், உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லி மக்களை மொழிரீதியாக பிரிக்க முற்படும் தமிழக அரசியல்வாதிகள் இனியாவது உண்மையை பேசி, ஆக்கபூர்வமான அரசியல் செய்வது நலம். இல்லையேல் மக்கள் உங்களின் மீது நம்பிக்கையிழப்பார்கள். என பாஜக செய்தி தொடர்பாளர், நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.