உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘விக்ராந்த்’ தனது முதல் கடல் பயணத்தை வெற்றிகரமாக முடித்தது. இதற்காக இந்த கப்பல் கொச்சியிலிருந்து கடந்த 4ம் தேதி புறப்பட்டது. கடல் பரிசோதனைகள் திட்டமிடப்பட்டபடி நடந்தன. இயந்திரங்களின் அனைத்து செயல்பாடுகளும் திருப்தியை அளித்தன. இந்திய கடற்படையிடம் இந்த கப்பல் ஒப்படைப்பதற்கு முன்பாக, இந்த கப்பலில் உள்ள அனைத்து சாதனங்கள் மற்றும் கருவிகள் சரியாக செயல்படுகிறதா என்பதை நிரூபிப்பதற்காக, இந்த கப்பல் இன்னும் பல கட்ட கடல் பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘விக்ராந்த்’ என்ற இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல், இந்திய கடற்படையின் கடற்படை வடிவமைப்பு இயக்குனரகத்தால்(DND) வடிவமைக்கப்பட்டு, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான கொச்சி கப்பல்கட்டும் நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 76 சதவீதத்துக்கும் அதிகமாக உள்நாட்டு தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், தற்சார்பு இந்தியா மற்றும் இந்திய கடற்படையின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு முன்மாதிரியாக இந்த விமானம் தாங்கி போரக்கப்பல் உள்ளது.
முதல்முறை கடல்பயணத்தின்போது, இன்ஜின் செயல்பாடு, மின் உற்பத்தி மற்றும் விநியோகம் மற்றும் துணைக் கருவிகள் உட்பட கப்பலின் செயல்பாடுகள் பரிசோதித்து பார்க்கப்பட்டன.இந்த கடல் பயண பரிசோதனைகளை, கடைசி நாளில் கடற்படையின் தெற்கு கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஏ.கே.சாவ்லா ஆய்வு செய்தார். கடல் பரிசோதனைகள் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்பட்டன, அனைத்து பரிசோதனைகளும் திருப்தி அளித்தன.
கொரோனா தொற்றுக்கு இடையிலும், கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு, இந்த கடல் பயண பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது, அனைத்து தரப்பினரின் முயற்சிக்கு சான்றாக உள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க மாபெரும் நடவடிக்கை.கடற்படையிடம், 2022ம் ஆண்டு ஒப்படைக்கும் முன்பாக, இந்த கப்பல் தொடர் கடல் பரிசோதனைகளை மேற்கொள்ளும்.