இயக்கம் என்றால் அப்படித்தான்”….”உனக்கு இதெல்லாம் புரியாது, விடு” என்று ஏமாற்றி விட்டார்.! தாமரை வெளியிட்ட பரபரப்பு..

0
Follow on Google News

தன் வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்து பாடலாசிரியர் கவிஞர் தாமரை தெரிவித்துள்ளதாவது. தியாகுவை நான் என் பெற்றோர் சம்மதம் பெற்று முறையாக மணம் செய்து கொள்ளவே விரும்பினேன். தியாகு என் பெற்றோரை நேரில் சந்தித்து அனுமதி பெற விரும்பினேன். ஆனால் என் பெற்றோர் அதிர்ச்சியடைந்து ( கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுப்பதா?! ) தியாகுவை சந்திக்க மறுத்து விட்டனர். எனவே தியாகு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுமதி கோரினார்.

அந்தக் கடிதத்தில் தாமரை பெற்றோர்களுக்கு தியாகு எழுதியதாவது., அன்பிற்குரிய அம்மா, அய்யா இருவருக்கும், வணக்கம். உங்கள் இருவரையும் நேரில் பார்த்துப் பேச விரும்பினேன். நீங்கள் அதை விரும்பவில்லை என்று தாமரை வாயிலாகத் தெரிந்தது கொண்டதால் இம்மடல். உங்களுக்கு என்னை ஓரளவு தெரியும் – என் குறிக்கோள்கள், என் வாழ்க்கை முறை எல்லாம்தான் ! குடும்ப வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்துத் தாமரை உங்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும்.

ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்வேன் : என் குடும்பச் சிக்கல்களுக்கு எந்த வகையிலும் தாமரை காரணமில்லை. தாமரை என்றொரு ஜீவனை நான் அறிவதற்குப் பல்லாண்டு முன்பே நான் என் மனைவியுடன் முறித்துக் கொண்டு விட்டேன் – அப்போது ஏற்பட்ட மனமுறிவு தான் இப்போது மணமுறிவாக வளர்ந்துள்ளது. உண்மையைச் சொல்வதென்றால், எனக்கும் என் மனைவிக்குமான இடைவெளியைக் குறைத்து எங்களை இணக்கப்படுத்தவே தாமரை முயன்றார். என் மனைவிதான் (லதா) அதற்கு இடம்தரவே இல்லை. எனக்கும் லதாவுக்குமான சிக்கலுக்கு அடிப்படையே எங்கள் மாறுபட்ட விழுமியங்கள் தாம். எதற்காக வாழவேண்டும்? என்பதற்கு எதிரெதிரான விடைகளை வைத்துக் கொண்டு எப்படிச் சேர்ந்து வாழ முடியும்?

நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்ததுதான்: தாமரைக்கும் **வுக்குமான பிரிவுக்கும் பிளவுக்கும் நான் எவ்வகையிலும் காரணமில்லை. தாமரை எவர்க்கும் எடுப்பார் கைப்பிள்ளை ஆக மாட்டார் என்பது அவரை எடுத்து வளர்த்த உங்களுக்கு தெரியாமலிருக்க முடியாது. ஆக, என் முடிவுக்குத் தாமரையோ, தாமரையின் முடிவுக்கு நானோ காரணம் இல்லவே இல்லை. உண்மையான நட்புணர்வோடு நாங்கள் ஒருவருக்கொருவர் நல்லறிவுரைகள் சொல்லிக் கொண்டிருப்போம், அவ்வளவு தான் !

இருவரும் அவரவர் வாழ்ந்து கொண்டிருந்த கொடிய வாழ்க்கையிலிருந்து (“உடம்பா டிலாதவர் வாழ்க்கை, குடங்கருள் பாம்போ டுடனுறைந் தற்று.”) விடுபடுவது உறுதியாகி விட்ட நிலையில்தான், ‘நாம் ஏன் வாழ்க்கைத் துணைகளாக இணையக் கூடாது?’ என்று நானும் தாமரையும் சிந்திக்க முற்பட்டோம். எங்கள் இருவரின் வயது, வாழ்க்கை அனுபவம், தகுநிலை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் இந்த முடிவுக்குச் செல்கிறோம்.

நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கறிந்து புரிந்து கொண்டவர்கள், எல்லா வகையிலும் கருத்தொருமித்தவர்கள். நான் அரசியலில் இருப்பவன், அவரோ திரைத்துறையில் இருப்பவர். துறைகள் வேறுவேறு என்றாலும் இரண்டிலும் சமூக பொறுப்போடு இயங்க நினைப்பவர்கள். எங்களுடையது ஒரு சராசரிக் குடும்ப வாழ்க்கையாக இருக்காது என்பதை நன்கறிவோம். எங்களிடம் சொந்த முறையிலான எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் குறைவு. அந்த குறைவான எதிர்பார்ப்புகளில் முகாமையான ஒன்று – நீங்கள் இருவரும் எங்களைப் புரிந்து கொண்டு எங்கள் ஒன்றுபட்ட வாழ்க்கையை உவப்புடன் ஏற்று வாழ்த்த வேண்டும் என்பது !

இறுதியாக ஒன்று – எங்கள் முடிவை நாங்கள் தேர்ந்து தெளிந்தே எடுத்துள்ளோம். இதில் பெருமிதம் உண்டே தவிர குற்றவுணர்வுக்கு இடமே இல்லை. எங்கள் இருவருக்குமே பகைவர்கள் (போட்டியாளர்கள்) உண்டு, அவர்கள் எங்கள் முடிவைக் கொச்சைப்படுத்தவே முயல்வார்கள் என்பதை அறிவோம். ஆனால் எங்கள் உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் அவரவர் துறையில் நின்று வென்று காட்டுவோம். தூற்றல் அப்போது துவண்டு விழும்.

என் மனைவி மட்டுமல்ல, இரண்டு பெண்குழந்தைகளும் உள்ளனர். பிரிவுக்குப் பிறகும் அவர்களுக்கும், லதாவின் பிறந்தகக் குடும்பத்தார்க்கும் நான் எல்லா வகையிலும் துணைநிற்பேன், இது அவர்களுக்கும் தெரிந்ததுதான். என்னோடு பொது வாழ்க்கையில் இணைந்து நிற்கும் தலைவர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவரோடும் பேசி, அவர்களின் ஒப்புதலையும் பெற்றுத்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். என்னைப் போலவே தாமரையையும் அவர்கள் நன்கறிவார்கள். எங்கள் மீதும் எங்கள் உறவின் மீதும் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு என்றும் உண்மையுள்ளவர்களாக இருப்போம்.

இன்னமும் உங்களுக்குப் பல சந்தேகங்கள் இருக்கலாம். விடை தெரியாத வினாக்கள் இருக்கலாம். நேரில் வர அனுமதித்தால் எல்லாவற்றையும் பேசித் தெளிவு படுத்த முடியும் என நம்புகிறேன். என தியாகு எழுதிய கடிதத்தை வெளியிட்ட தாமரை மேலும் அவர் கூறியதாவது, மேற்கண்ட கடிதமே அனைத்து விவரங்களையும் மாத்திரை வில்லை அளவில் கூறிவிடும். ஒன்றிரண்டு விவரங்களை மட்டும் விரித்துக் கூற வேண்டும். பதிவு நீண்டு கொண்டே போவதால் அவற்றை அடுத்த பதிவில் கூறலாம் என்று நினைக்கிறேன். ஒன்றை மட்டும் கூறி விடுகிறேன்.

என்னைத் திருமணம் செய்ய ‘பொதுவாழ்க்கையில் இணைந்து நிற்கும் தலைவர்கள், தோழர்கள், நண்பர்கள்’ அனைவரின் ஒப்புதலையும் பெற்றிருக்கிறார். யாரெல்லாம் அந்தத் தலைவர்கள், தோழர்கள், நண்பர்கள்..?? 2000,2001 காலவாக்கில் தியாகுவின் இயக்கத்தின் பெயர் தமிழ் தமிழர் இயக்கம். அப்போது அதன் தலைவர் சுபவீ. என்னைத் திருமணம் செய்ய முதலில் இயக்கத்தின் அனுமதி பெற வேண்டும், அதற்கு முன் இயக்கத்தலைவரின் அனுமதி வேண்டும், பின் அவர் முன்னெடுப்பின் கீழ் இயக்கக் கூட்டத்தைக் கூட்டி உறுப்பினர்களின் அனுமதி பெற வேண்டும். இயக்கம் அனுமதித்த பிறகு தோழமை இயக்கங்கள், உதவி செய்யும் நண்பர்கள் என வட்டம் விரிந்தது.

தலைவர்கள் என்னும் தலைப்பின் கீழ் வைகோ ஐயா, நெடுமாறன் ஐயா, பெ.மணியரசன் தோழர், கொளத்தூர் மணி தோழர் தொடங்கி நல்லகண்ணு ஐயா, தோழர் திருமாவளவன் வரை அன்றைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்த அனைவரின் பெயரும் இருந்தது. அப்படித்தான் என்னிடம் சொன்னார். இதில் சு*பவீ, பெ.ம தவிர மற்றவர்களை நான் அறிய மாட்டேன். வெறும் பெயர்களாகத்தான் தெரியும். திகைப்பாக இருந்தது, எதற்கு ஒரு திருமணத்திற்கு இத்தனை பேர் அனுமதி ? என்று கேட்டேன். “உனக்குத் தெரியாது, இயக்கம் என்றால் பொதுவாழ்க்கை என்றால் அப்படித்தான்” என்றார்.

அதுசரி, பழகும்போது, திருமண உறுதி கொடுக்கும்போது இவர்களிடமெல்லாம் அனுமதி வாங்கிக் கொண்டு பழகவில்லையே, திருமணம் என்றால் மட்டும் அனுமதிதேடி ஓட வேண்டுமா? என்றேன். “உனக்கு இதெல்லாம் புரியாது, விடு” என்று சொல்லி விட்டார். ஆக, இந்த அனுமதி வாங்கல் படலம் மட்டுமே இரண்டு ஆண்டுகள் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன் . ஆமாம், அப்போதெல்லாம் எனக்கு இயக்கம் என்றாலோ அரசியல் என்றாலோ என்னவென்றே தெரியாது. தியாகு என்ன சொன்னாலும் அப்படியே நம்புவேன். என் மனதில் பதிக்கப்பட்ட இயக்கம் வேறு. (நடப்பில் இருந்தது வேறு) ! எனவேதான் திருமணத்திற்கு துரோகம் செய்து, வேறொரு பெண்ணுடன் ஓடிப்போன போது, நான் இந்தத் ‘தலைவர்களை, தோழர்களை, நண்பர்களை’ அணுகி நியாயம் கேட்க முற்பட்டேன் என கவிஞர் தாமரை தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை வெளியிட்டுள்ளார்.