திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி- நியூடவுன் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பழனிமுத்து தலைமையில் போலீசார் நியூடவுன்-பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஜீப் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது ஜீப்பில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜீப்பில் பயணம் செய்த 1 பெண் உட்பட 3 பேரை தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வாணியம்பாடி ஜீவாநகரில் மஜக நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாசின் சகோதரி ரபியா பர்வீன் (43) மற்றும் பசல் (26), சலாவுதீன்(27) என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ஜீப் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து ரபியா பர்வீன் வீட்டில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் 5 பெண் போலீசார் சுமார் 1 மணி நேரம் சோதனையில் செய்தனர். சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரை வாணியம்பாடி குற்றவியல் நீதமன்ற நடுவர் காளிமுத்து வேல் முன்பு ஆஜர் படுத்தினர்.
நீதிபதி அவர்களுக்கு 13 நாட்கள் நீதி மன்ற காவலில் வைத்து அடுத்த மாதம் 8 ஆம் தேதி மீண்டும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த நீதிபதி காளிமுத்துவேல் உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து 3 பேரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த ஜூலை மாதம் 26 ம் தேதி டீல் இம்தியாஸ் கிடங்கில் கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் பசல், சலாவுதீன் ஆகியோர் கைதாகி சிறைக்கு சென்று 2 நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நிலையில் மீண்டும் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.