மதுரை மாநகராட்சி அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார துறையில் பணிபுரிந்து வந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நுரையீரலில் 90 சதவிகிதம் அளவுக்கு தொற்று ஏற்பட்டதால், சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவர் சண்முகப்பிரியா கர்ப்பிணியாக இருந்த காரணத்தால் அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நிலையில், கொரோனாவுக்கு தாயும், அவரின் வயிற்றில் இருந்த சிசுவும் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது, இவரை தொடர்ந்து 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர் கார்த்திகா, சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த உயிரிழந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மருத்துவர்கள் உயிர் இழந்துவரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் சுமார் 6 மாவட்டங்களில் மட்டும் 51 மருத்துவர்கள் 76 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை கையாளும் இவர்கள் பி. பி. இ., கிட் உடையை பாதுகாப்பாக அணிந்து கழற்றி பயோ மருத்துவ கழிவாக சேர்ப்பது வரை நிதானமாக கையாள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் தற்போது நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து சரியாக இதை பின்பற்றாதும் இவ்வித மரணங்கள் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர், மேலும் தொடர்ந்த மருத்துவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருவது, சுகாதாரத்துறையில் கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.